நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மிஃராஜ் விண்பயணத்தின் போது அவர்கள் எல்லா நபிமார்களையும் வெவ்வேறு வானத்தில் சந்தித்தார்கள். விண்ணுலகப் பயணத்தில் நபிகளார் நபிமார்களை மட்டுமல்ல நரகத்தின் காவலரான வானவர் மாலிக்கையும், இறுதிக் காலத்தில் வரவிருக்கும் பெரும் பொய்யனான தஜ்ஜாலையும் கண்டார்கள்.
நபி முஹம்மது (ஸல்) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தபோது அங்கு ஏழைகளே அதிகமாகக் குடியிருந்தனர். சொர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது. நரகத்தை எட்டிப் பார்த்தபோது அதில் பெண்களே அதிகமாக இருந்தனர்.
நபிகளாருக்கு பல சமுதாயத்தாரின் நிலையும் காட்டப்பட்டன. ஒவ்வொரு நபிகளுடனும் அவருடைய சமுதாயத்தார்கள் இருப்பதைக் கண்டார்கள். சிலருடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத்தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத்தூதரும், பத்துப் பேர்களுக்குட்பட்ட ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத்தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்வதைக் கண்டார்கள்.
அடிவானத்தை அடைத்திருந்த ஒரு பெரும் கூட்டத்தைக் கண்டார்கள். அது தன்னுடைய சமுதாயமாக இருக்குமென்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அது மூஸா (அலை) அவர்களின் சமுதாயமென்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அப்போது அடிவானத்தையே அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டார்கள். அதுதான் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயமென்று சொல்லப்பட்டது.
அதில் விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் அடங்குவர் என்றும் சொல்லப்பட்டது. பறவை சகுனம் பார்க்காமல், நோய்க்காகச் சூடிட்டுக் கொள்ளாமல், ஓதிப்பார்க்காமல், தம் இறைவனை மட்டுமே சார்ந்திருப்பவரே விசாரணையின்றி, கேள்விக்கணக்கின்றிச் சொர்க்கம் செல்லபவர்கள்.
அதன் பிறகு நபிகளாரிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அதில் ஒன்றில் பால் இருந்தது, மற்றொன்றில் மது இருந்தது. வானவர் ஜிப்ரீல் (அலை), “இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்களோ அதைக் குடியுங்கள்” என்று கூறினார்கள். நபிகளார் பாலை எடுத்துக் குடித்தார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) “நீங்கள் இயல்பான பானத்தை எடுத்துக் கொண்டீர்கள். மதுவை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப் போயிருக்கும்” என்று கூறினார்கள்.
பிறகு நபிகளாருக்கு ‘அல் பைத்துல் மஃமூர்’ எனும் ‘வளமான இறையில்லம்’ காட்டப்பட்டது. அது குறித்து ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், நபி முஹம்மது (ஸல்) கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை), “இதுதான் ‘அல் பைத்துல் மஃமூர்’. இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்” என்றார்.
வான் எல்லையிலுள்ள ‘சித்ரத்துல் முன்தஹா’ எனும் இடத்திற்கு நபிகளார் கொண்டு செல்லப்பட்டார். அதன் பழங்கள் யமனில் உள்ள ‘ஹஜ்ர்’ எனுமிடத்தின் மண் கூஜாக்கள் போல் பெரியதாக இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போல் இருந்தன. அதன் வேர்ப்பகுதியில் நான்கு நதிகள் ஓடிக் கொண்டு இருந்தன. இரண்டு நதிகள் வெளியேயும், இரண்டு நதிகள் உள்ளேயும் ஓடிக் கொண்டு இருந்தன. வெளியே இருக்கும் இரண்டு நதிகள் நைல் மற்றும் யூப்ரடீஸ் நதிகளாகும். உள்ளே இருக்கும் நதிகள் சொர்க்கத்திலுள்ள ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய இரண்டு நதிகளாகும்.
கவ்ஸர் ஆற்றின் அருகே அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் இருந்தன. அங்கு விண்மீன்களின் எண்ணிக்கையைப் போன்று கணக்கிலடங்கா கோப்பைகள் வைக்கப்பட்டு இருந்தன. தொலைதூர பரப்பளவு கொண்ட அதன் நீர் பாலைவிட வெண்மையானதாகவும், அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்ததாகவும் இருந்ததைக் கண்ட நபிகளார் அதன் சிறப்பைப் பற்றி வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டார்கள். “இதுதான் உங்களுடைய இறைவன் உங்களுக்குச் சிறப்பாக வழங்கிய அல்கவ்ஸர். யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள்” என்று ஜிப்ரீல் (அலை) விளக்கினார்கள்.
நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மீது அவர்களின் சமுதாயத்தாருக்காக ஐம்பது நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. அதனை ஏற்று, நபிகளார் திரும்பி வரும்போது, மூஸா (அலை) அவர்கள் “உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?” எனக் கேட்டார்கள். “ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான்” என்றார்கள் நபி முஹம்மது (ஸல்).
“உங்கள் சமூகம் அதற்குச் சக்தி பெறாது. நீங்கள் திரும்பச் சென்று குறைத்துக் கேளுங்கள்” என்றார். நபிகளாரும் திரும்பச் சென்று கொஞ்சம் குறைத்து வந்து மூஸா (அலை) அவர்களிடம் சொன்னபோது. “இல்லை, நீங்கள் மீண்டும் செல்லுங்கள், உங்கள் சமூகம் அதற்குச் சக்தி பெறாது” என்றார்கள். நபி முஹம்மது (ஸல்) மீண்டும் சென்று இன்னும் கொஞ்சம் குறைத்து வந்தார்கள். மூஸா (அலை) மீண்டும் “இதற்கும் உங்கள் சமூகம் சக்தி பெறமாட்டார்கள்” என்றார்கள். இப்படியாக மறுபடி மறுபடி திரும்பச் சென்று இறுதியாக ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்கி வந்தார்கள்.
ஐந்து நேரத் தொழுகையைத் தரும்போது ‘அது ஐம்பதிற்குச் சமம், ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்’ என்று அசரீரியாக அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. நபி முஹம்மது (ஸல்) ஐந்து நேரத் தொழுகை ஏற்று வந்தபோது மீண்டும் மூஸா (அலை) அதனைக் குறைத்து வரும்படி சொன்னார்கள். “மேலும் குறைத்துக் கேட்பதற்கு நான் வெட்கப்படுகிறேன். என் சமூகத்தினர் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது” என்று நபி முஹம்மது (ஸல்) சொல்லிவிட்டார்கள்.