தொழில் அதிபருடன் திருமணமா?: அனுஷ்கா பேட்டி

அனுஷ்காவுக்கு 35 வயது ஆகிறது. 15 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் முடிவு செய்து இருப்பதாகவும் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபரை மாப்பிள்ளையாக நிச்சயம் செய்து இருப்பதாகவும் தகவல் பரவி உள்ளது. இந்த வருடம் அனுஷ்காவுக்கு படம் எதுவும் வெளியாகவில்லை. திரைக்கு வருவதாக இருந்த சி-3 படமும் தள்ளிப்போய் விட்டது. இதனால் அவர் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கு அனுஷ்கா பதில் அளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி வருமாறு,

“எனக்கு திருமணம் எப்போது என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். மாப்பிள்ளை முடிவாகி விட்டது என்றும் அடுத்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர்தான் மாப்பிள்ளை என்றும் வதந்தி பரவி இருக்கிறது.

என்னைப்பொறுத்தவரை திருமணத்துக்கு நான் தயாராக இருந்தாலும், அதற்கான நேரம் அமைவது முக்கியம். தற்போது கைநிறைய படங்கள் இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். கடந்த வருடம் எனக்கு நல்ல படங்கள் அமைந்தன. பாகுபலி படத்தில் எனது கதாபாத்திரம் பேசப்பட்டது. இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை கூட்டி நடித்தேன். ருத்ரமாதேவி படமும் சிறப்பாக அமைந்தது.

இந்த வருடம் நான் நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இது வருத்தமாக இருந்தாலும் அடுத்த வருடம் திரைக்கு வரப்போகும் பாகுபலி இரண்டாம் பாகம். சி-3, ஓம்நமோ வெங்கடேசாய, பாக்மதி ஆகிய படங்களை நினைத்து மகிழ்ச்சி அடைக்கிறேன். இந்த 3 படங்களும் எனது திரையுலக வாழ்க்கையில் முக்கிய படங்களாக பேசப்படும்.

பாகுபலி இரண்டாம் பாகத்தில் நான் நடித்துள்ள தேவசேனா கதாபாத்திரம் புதுமையாக இருக்கும். ஓம்நமோ வெங்கடேசாய பக்தி படமாக தயாராகி இருக்கிறது. இந்த படத்திலும் என்னை வித்தியாசமான தோற்றத்தில் பார்க்கலாம். இவ்வாறு அனுஷ்கா கூறினார்.