தமிழ் சினிமாவின் வியாபாரமே பாடல்களை பொறுத்துதான் அமைகிறது. ஒவ்வொரு பாடலின் பின்னணியிலும் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பலரின் உழைப்பு உள்ளது. அப்படியிருந்தும் எல்லா பாடலாசிரியர்களுக்கும் குறித்த அங்கீகாரம் கிடைக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறி தான்.
தமிழ் சினிமாவில் இன்றைய பாடலாசியர்களின் நிலை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை பாடலாசியர் முருகன் மந்திரம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த அறிக்கை
இந்திய சினிமாவைப்பொறுத்த வரை ஒரு திரைப்படத்தின் பங்களிப்பில் பாடல்கள் மிக முக்கியமான இடத்தை கொண்டுள்ளன. ஆரம்ப கட்டத்தில். 40 பாடல்கள் இடம் பெற்ற படங்கள் கூட இருப்பதாக சொல்வார்கள். இன்றும் கூட பல படங்களை பார்க்கவும் அந்த படத்தின் வெற்றிக்கும் முன் வெளியீடாக வரும் பாடல்கள் மிகப்பெரிய காரணமாக அமைகின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் பாடலாசிரியர்களின் நிலை பற்றி சொல்ல வருத்தமாக இருக்கிறது. கோபமாகவும் இருக்கிறது.
சமீபத்தில் மேடை போட்டு நாட்டாமை பண்ணுகிற, ஒருவர் இயக்கிய படத்தில் நண்பர் ஒரு பாடல் எழுதி இருந்தார். அவரிடம் அந்த படம் பற்றி யதார்த்தமாக பேசும்போது, அந்த படத்தில் நான் ஒரு பாடல் எழுதி இருக்கிறேன், ஆனால் என் பெயரை போஸ்டரில் போடவில்லை. என் பெயரை போடுங்கள் என இயக்குநரிடம் கேட்டேன். உங்கள் பெயரை போட்டால் போஸ்டரின் அழகு குறைந்து விடும் என்று சொன்னதோடு கடைசி வரை போஸ்டரில் பெயரே போடாமல் விட்டுவிட்டார்கள் என்று வருத்தப்பட்டார். இத்தனைக்கும் அவர் எழுதிய முதல் பாடலே பெரிய ஹிட் பாடல் தான்.
சமீபத்தில் நானும் இன்னும் இரண்டு பாடலாசிரியர்களும் பாடல் எழுதியுள்ள ஒரு படத்தோட போஸ்டர் வந்தது. அடடா. நம்ம படமாச்சேன்னு போஸ்டர்ல பெயரை தேடுனா, என் பேரு மட்டுமில்ல மற்ற பாடலாசிரியர்கள் பெயரும் இல்ல. படம் சம்பந்தமாக பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட செய்திகள், படத்தின் விக்கிபீடியா பக்கம்… எதுலயும் பாடலாசிரியர்கள் பெயர் இல்ல.ஒவ்வொரு சினிமாக்காரனும் படுற கஷ்டம் ரொம்ப ரொம்ப பெரிசு. அவங்களுக்கு உங்களால முடிஞ்ச உதவியை செய்யுங்கள் நண்பர்களே.
சம்பளமோ, சன்மானமோ… அதை கொஞ்சமா கொடுத்தாக்கூட பரவாயில்லை. ஆனா, மறக்காம அவங்களோட உழைப்புக்கான அங்கீகாரத்தை, அவங்களோட பெயர்களுக்கு கொடுங்க. அவ்ளோ பெரிய போஸ்டர்ல பாடலாசிரியர்கள் பெயரையும் சேர்த்து போடுறதுல ஒண்ணும் கெட்டுப்போகப் போறது இல்ல. அதோட படத்தோட செய்திகள், போஸ்டர் இந்த மாதிரி எதுலயும் பெயர் இல்லைன்னா, சில நேரங்களில்… பிரபலமான ஆடியோ இணைய தளங்களான… ITunes, Saavn, Gaana, Raaga, Hungama, இது போன்ற பிற தளங்கள் எதுலயும் பாடலாசிரியர்கள் பெயர் வராமல் போகிறது.
செய்திகள், மேடைகள், போஸ்டர்ஸ், டிரெய்லர்ல.. அவங்களுக்கான சின்ன அங்கீகாரத்தை கொடுத்தீங்கன்னா, அவங்களோட வளர்ச்சிக்கு நீங்களும் ஒரு சின்ன காரணமா இருப்பீங்க… அவங்க உங்க வளர்ச்சிக்கு ஒரு சின்ன காரணமா இருக்கிற மாதிரி. அதை விட்டுட்டு அவங்க வாயிலயும் வயித்துலயும் அடிச்சு துரோகம் பண்ணாதீங்க. இது என் அன்பான வேண்டுகோள் சினிமா நண்பர்களே.
அதே நேரத்தில் பாடலாசிரியர்களை அக்கறையோடும் அன்போடும் கவனித்து அவர்களுக்கான மரியாதையையும் அங்கீகாரத்தையும் தருகிறவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அனைவருக்கும் அன்பின் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.