ரஷ்யாவின் ஏவுகணையும்
வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனையும்
மிகவும் சக்தி வாய்ந்தது என்றிருந்தேன்..
ஆனால், உன் சீற்ற அலையின் முன்னே
அவையெல்லாம் சின்னப்பட்டாசென.
கடந்த இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு
டிசம்பர் 26 இல் தான் புரிந்தது
அமெரிக்கா எத்தனை எத்தனை
அணுகுண்டுகளைக் கண்டுபிடித்தாலும்
ஈரான் எத்தனை எத்தனை
அணுகுண்டுகளைப் பரிசோதித்தாலும்
நாசா எத்தனை எத்தனை
ரொக்கட்டுக்களை ஏவினாலும்
அவையெல்லாம் உனது
ஆக்ரோஷ அலையின் முன் பெரிதல்ல.
ஆனாலும், கடல் தாயாகப் போற்றிய உன்னிடம்
சில கேள்விகள்..?
ஆழிக் கடலெங்கும் அளந்த எம் வம்சத்தை
இந் நாட்டு அரசாங்கம் இன அழிப்புச் செய்வது போதாதென்று
நீயும் ஊழித் தாண்டவமாடி எம் உறவுகளைக்
காவிச் சென்றது ஏன்?
சாமி குடியிருந்த கோயில்களையும்
புரட்டிப் போட்ட நீ
எதுவுமறியாத சின்னஞ் சிறு பிஞ்சுகளையும்
விட்டு வைக்காதது ஏன்?
ஊருக்கு ஒரு சுடுகாடு என்பதை மாற்றி
முழு ஊரையும் சுடுகாடாக்க உனக்கு
கட்டளையிட்டது யார்?
இங்கிதம் துறந்த இயற்கையே!
இயற்கை முன் செயற்கை பெரிதல்ல என்பதை
நீ நிரூபித்து விட்டாய்!
நீயும், பெண்ணும் பொறுமையிழந்தால்
பூமி தாங்காது தாயே
அதனால் விநயமாய் உன்னிடம்
ஓர் வேண்டுகோளை விடுக்கின்றோம்
சுனாமியாக உருவெடுத்த உன்னிடம்
சுவாமியாக நினைத்துக் கேட்கின்றோம்
மீண்டும் வந்துவிடாதே..
ஆறாத ரணங்களோடு எஞ்சியிருக்கும் எமக்கு
உன் ஊழித் தாண்டவம்
ஒரு போதும் வேண்டவே வேண்டாம்!