முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையில் இலங்கையின் அரச புலனாய்வு சேவையினர் தொடர்புள்ளமையை குற்றப்புலனாய்வு திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் சுட்டிக்காட்டியிருந்தன.
எனினும் போதிய சாட்சிகள் இல்லையென்றுக்கூறி பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் த ஹிந்துவிடம் தெரிவித்துள்ளார்.
சாதாரண கடற்படை வீரர்கள் தமது விருப்பப்படி இந்தக்கொலையை செய்யவில்லை யாரோ இதற்கு உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்தக்கொலை நடந்து 10 வருடங்களாகியும் இன்னும் யார் கொலைக்கான உத்தரவை பிறப்பித்தது என்பதை தாங்கள் தேடிக்கொண்டிருப்பதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரப்படுத்திய நிலையிலேயே ரவிராஜ், 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று கொழும்பில் வைத்துகொல்லப்பட்டார்.
வழக்கு விசாரணையின்போது அரச சாட்சியாக மாறிய முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர், ரவிராஜை கொலை செய்வதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முன்னாள் பிரதியமைச்சர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் குழுவுக்கு 50மில்லியன்ரூபாய் தயார்ப்படுத்திக்கொடுத்தார் என்று தெரிவித்திருந்தார்.
எனினும் போதிய சாட்சியங்கள் இல்லையென்றுக்கூறி ஜூரிகள் எதிரிகளை விடுதலை செய்ய பரிந்துரைத்தனர்.
குறித்த வழக்கு பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு கீழும் குற்றவியல் சட்டத்துக்கு கீழும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதில் கொலையுடன் தொடர்புடையதாக கூறி இரண்டு கடற்படை அதிகாரிகளும் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
சட்டப்படி, ஜூரிகளுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு கீழ் குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்க அனுமதிக்க முடியாது.
எனினும் இந்த வழக்கில் குறித்த கடற்படை அதிகாரிகளை குற்றவியல் சட்டத்தின்கீழ் ஜூரிகள் விடுவித்துள்ளனர்.
சட்டத்தை பாரபட்சமாக முன்னெடுத்துக்கொண்டு வெறுமனே தமிழர் ஒருவர் பிரதம நீதியரசராக நியமித்துள்ளமையில் எவ்வித பயனும் இல்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.