தனித்து ஆட்சி அமைக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தும் ஐ.தே.கட்சியினர்!

கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் வெளியிட்டு வரும் கருத்துக்களால், அந்த கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டு அரசாங்கத்தில் தொடர்ந்தும் இருப்பதில் அர்த்தமில்லை என்பதால், கூடிய விரைவில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் கொள்ளைக்கார்கள் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால், கொள்ளையர்களிடம் இருந்து நாடு ஓரளவுக்காவது காப்பற்றப்பட்டுள்ளது என்ற நிலைப்பாட்டை சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சமூகத்தில் விதைத்து வருவதாகவும் இது கட்சிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் நிரந்த முடிவுக்கு வரவில்லை என்றால், கட்சியின் கீழ் மட்டத்திலும் அது பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பிரதமர் நேரடியாக பதில் எதனையும் கூறவில்லை.

பிரிதொரு நாளில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுப்பதாக பிரதமர் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.