ஏழ்மையை விரட்டும் பிரதோஷ விரதம்!

ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு பட்சத்திலும் துவாதசிக்கு மேல் திரயோதசி சேரும் நாள் பிரதோஷம் எனப்படும். அது பூத, பிரேத, பிசாச, ராட்சாதிகள் உலகத்தோரைப் பிடிக்கும் சமயமாகும். அப்பொழுது எந்த வேலையிலும் ஈடுபடாமல் மவுன விரதம் இருந்து, சிவபெருமானை ஆராதிக்க வேண்டும்.

மேற்படி பிரதோஷம் சனிக்கிழமையுடன் சேர்ந்தால் மகா பிரதோஷம் எனப்படும். அப்பொழுது உலகுக்குத் தீமை நேரிடாமல் இறைவன் தாண்டவம் ஆடுகிறார். எல்லோரும் அங்கே கவனத்தைச் செலுத்துவதால் ஒருவருக்கும் தீமை நேரிடாது.

செல்வம், மக்கட்பேறு, ஆரோக்கியம், துஷ்டக்கிரகம் விலகல், துக்க நிவர்த்தி இவற்றை நாடுவோர் பிரதோஷ விரதம் அவசியம் கடைபிடிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில், சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ அர்ச்சனை செய்து, பூஜிப்போர் சகல பாக்கியத்தையும் பெறுவார்கள்.

சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவராத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுகிறார்கள். ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.