மதுரையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கனிமொழி எம்.பி. இன்று பகல் விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
தமிழக விவசாயிகள் தற்கொலை செய்வதை பாரதீய ஜனதா கொச்சைப்படுத்தி வருகிறது. இதில் மத்திய-மாநில அரசுகள் தகுந்த கவனம் செலுத்தி அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா? என பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் இதற்காக ஆக்கப் பூர்வமான முயற்சி எதையும் பாரதீய ஜனதா எடுக்க வில்லை.
ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி ஜனவரி 3-ந்தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அலங்காநல்லூரில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த விசயத்தில் மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அடிக்கடி துயரத்திற்கு ஆளாகின்றனர். தங்களது வாழ்வாதாரத்தையும் இழக்கின்றனர். இதனை தடுக்க மத்திய அரசை மாநில அரசு வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் உடனடி தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.