போயஸ் கார்டன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு குறைப்பு!

ஜெயலலிதா வசித்து வந்த போயஸ்கார்டன் வேதா நிலையத்துக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசார் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த காலகட்டங்களில் பாதுகாவலர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

ஜெயலலிதா உயிருக்கு அச்சுறுத்தல் இருந்த காரணத்தால் அவர் பாதுகாப்புக்காக சுமார் 240 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

போயஸ்கார்டன் வீட்டில் இருந்து சுமார் 300 அடி தொலைவிலேயே ஒரு உதவி கமி‌ஷனர் தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர். வி.வி.ஐ.பிக்களை மட்டுமே அவர்கள் அந்த பகுதியில் செல்ல அனுமதிப்பதுண்டு.

இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகும் 240 போலீசாரும் போயஸ்கார்டன் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் இருந்தனர். இது பல்வேறு தரப்பிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் விடுத்த அறிக்கையில், “போயஸ்கார்டன் வீட்டுக்கு இன்னமும் ஏன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்?” என்று கேள்வி எழுப்பினார்கள். இதையடுத்து அங்கு பாதுகாப்பை குறைக்க அரசு முடிவு செய்தது.

அதன்படி போயஸ் கார்டன் வீட்டில் இன்று முதல் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. நான்கு போலீசார் மட்டுமே அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களை இப்போது தடுத்து நிறுத்தவில்லை. கெடுபிடிகளும் செய்வதில்லை.

போயஸ்கார்டன் வீடு முன்பு தனியார் நிறுவனத்தை சேர்ந்த 15 பேர் சபாரி உடை அணிந்த பாதுகாவலர்கள் மட்டுமே நிற்கிறார்கள். அவர்கள் 5 இடங்களில் தலா 3 பேர் வீதம் நிற்கிறார்கள். உயர் போலீஸ் அதிகாரிகளையோ சட்டம்- ஒழுங்கு போலீசாரையோ காண முடியவில்லை.