சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தமிழ்நாட்டு பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை. உச்சநீதிமன்றமும் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தற்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பு நிலுவையில் உள்ளது. ஸ்பெயின் நாட்டில் விளையாட்டின் போது மாடுகளை குத்திக்கொல்ல அனுமதி வாங்கியுள்ளனர். தமிழகத்தில் காளைகளை பல இடங்களில் தெய்வமாக வழிபடுகிறார்கள்.
ஏர் உழவும், வண்டிகளை இழுக்கவும் காளைகளை பயன்படுத்துகிறோம். மாடுகள் வெயிலில் நிற்கிறது என்று நீதிபதி ஒருவர் சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்க தல்ல. சிங்கம், புலி, ஓநாய், கரடி ஆகிய காட்டு விலங்குகள் பட்டியலில் இருந்து மாடுகளை மத்திய அரசு நீக்க வேண்டும்.
அதன் பிறகு ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும். இதையெல்லாம் கடந்த 15-ந் தேதி பிரதமர் மோடியை சந்தித்து கூறி இருக்கிறேன். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கொடுத்து விட்டு ஒரு முறை வந்து பாருங்கள் என அழைப்பு விடுத்து இருக்கிறேன்.
தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருக்கிறார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மோடி தலையிடுவார் என நம்புகிறேன். இன்னும் ஓரிரு நாட்கள் தான் உள்ளது .எனவே ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் ஒரு தேசிய இனத்தின் கலாசாரத்தையே அழித்து விடுகிறார்கள் என கருதுவோம்.
ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லையென்றால் மத்திய அரசு மீது மக்களுக்கு அதிருப்தியும், வெறுப்பும் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.