சாரதிகளின் கவனத்திற்கு..! ஜனவரி 6 வரை விசேட சோதனை!

மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்காக பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கை ஜனவரி 6ஆம் திகதிவரை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நத்தார் தினத்தை முன்னிட்டு இந்த சோதனை நடவடிக்கைகள் கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மதுபோதையில் வாகனம் செலுத்துவதால் அதிக விபத்துகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டிகை காலம் என்பதால் இந்த நிலைமை மேலும் அதிகரிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டே விசேட சோதனை நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்படி சோதனை நடவடிக்கையானது ஜனவரி மாதம் 6ஆம் திகதி வரை தொடரவிருப்பதாக பொலிஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.யு.சந்திரதாஸ தெரிவித்தார்.

புதுவருடத்தை முன்னிட்டு மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை கண்டறிவதற்கான இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் தொடரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.