யாழில் உதயமானது புதிய அரசியல் கட்சி!

யாழில் எம்.ஜி. ஆர் நினைவாகத் “தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி” எனும் பெயரில் புதிய கட்சி அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலய முன்றலில் அனைத்துலக எம்.ஜி. ஆர் பேரவையின் ஏற்பாட்டில் தமிழக முன்னாள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாள், மற்றும் முன்னாள் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன் மதிமுகராஜாவின் 18ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று இடம்பெற்றது.

இதன் போது கட்சியின் செயலாளர் இரவு 07.30 மணியளவில் புதிய கட்சி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பைப் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இதன்படி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி. ஆரின் தீவிர இரசிகருமான செல்லையா விஜயரட்ணம் கட்சியின் தலைவராகவும்,

அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன் மதிமுகராஜா விஜயகாந்த் கட்சியின் செயலாளர் நாயகமாகவும், இ.வசந்த் கட்சியின் பொருளாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

மேலும் “தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி” கட்சியின் செயலாளர் நாயகமாகத் தெரிவாகியுள்ள பொன்மதிமுகராஜா விஜயகாந்த்,

“இந்த மண்ணுக்கும் எமது மக்களுக்கும் என்றும் எனது உயிர் மூச்சுள்ள வரை உயிரைத் துச்சமென மதித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாக ஏற்றுக் கொண்டு செயற்பட ஆரம்பிக்கிறேன்” என மேடையில் வைத்து வழங்கிய உறுதி மொழி வழங்கினார்.

முன்னதாகத் தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன், அண்மையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மற்றும் முன்னாள் அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவையின் தலைவர் பொன் மதிமுகராஜாவின் உருவப் படங்களிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் செல்லையா விஜயரட்ணம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அத்துடன் ஈழத்தின் பிரபல பாடகரான சுகுமாரும் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, நினைவுரைகளை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் செல்லையா விஜயரட்ணம் ஆகியோர் நிகழ்த்தினர்.