கின்னஸ் சாதனை படைக்குமா இலங்கை…!

கின்னஸ் சாதனையை இலக்கு வைத்து கொழும்பு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நத்தார் மரம் திட்டமிட்டதனை விட குறைவான உயரத்தினையே கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

325 அடி உயரம் கொண்டதாக இருக்கும் என தெரிவித்து பல மில்லியன் செலவில் அமைக்கப்பட்டுள்ள போதிலும், திட்டமிட்டதனை விட குறைவான உயரத்திலேயே குறித்த நத்தார் மரம் அகை்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

முன்னதாக குறித்த நத்தார் மரம் அமைக்கப்படுவதற்கு கர்தினால் மல்கம் ரஞ்சித் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் திடீரென இதன் கட்டுமானப் பணிகள் இடை நிறுத்தப்பட்டன.

எனினும், குறித்த கட்டுமான பணிகள் மீட்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 24ஆம் திகதி இரவு அமைச்சர் அர்ஜூன ரனதுங்கவினால் இந்த நத்தார் மரம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நத்தார் மரம் திட்டமிட்டதைப் போன்று 325 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்படவில்லை. நிர்மான பணிகள் இடைநிறுத்தப்பட்டமையினால் 73 மீற்றர் (238 அடி) உயரமுள்ள நத்தார் மரமே தற்போது அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, தற்போது உலகின் உயரமான நத்தார் மரமாக சீனாவின் குவாங்சூ நகரில் அமைக்கப்பட்ட, 55 மீற்றர் (180 அடி) உயரமான நத்தார் மரமே காணப்படுகின்றது.

எவ்வாறாயினும், காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நத்தார் மரமே உலகில் மிக உயரமானது என்பதை கின்னஸ் உலக சாதனைப் பதிவு இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

இதேவேளை, நல்லிணக்கத்தை நோக்காக கொண்டு குறித்த நத்தார் மரம் அமைக்கப்பட்டிருந்த போதிலும், இதன் திறப்பு விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.