இலங்கையில் தொழில்நுட்ப ரீதியான மாற்றம் விரைவில்!

இலங்கை போன்ற நடுத்தர வருமானம் பெறும் நாட்டில் டிஜிட்டல் செயல்முறை ஒரு சிறந்த அடிப்படையாகும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அரச நிர்வாகத்தில் தரத்தை சிறப்பாக முன்னெடுக்க முடிவதோடு அரச சேவையும் மேம்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

பொருளாதார டிஜிட்டல் செயற்பாட்டின் மூலம் சந்தையையும் தொழில்நுட்பத்தையும் விரைவில் அடைந்து கொள்ளக்கூடிய பின்னணி உருவாக்கப்படும்.

பொருளாதார டிஜிட்டல் கட்டமைப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 15 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்கீழ் வரி முகாமைத்துவம் வரி மூலத்தையும் விரிவுபடுத்தும் வல்லமை உள்நாட்டு வருமான வரி திணைக்களத்திற்கு கிடைக்கும்.

வரி செலுத்துபவர்களுக்காக இலத்திரனியல் ஆவணங்கள் மற்றும் இலத்திரனியல் கொடுப்பனவு அலுவலகம் அமைக்கப்படும். இலத்திரனியல் அடையாள அட்டையின் ஊடாக இதற்கு பயன் கிடைக்கும்.

வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் இது இலகுவாக அமையும். தேசிய பண கொடுப்பனவு தளமொன்றின் மூலம் இணையத்தளத்தின் ஊடாக அனைத்து பணம் செலுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான ஒரு முறை வகுக்கப்படும்.

அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களை வீடியோ கொன்பரன்ஸ் ஊடாக இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஒத்துழைப்புடன் கணனி பாதுகாப்பை பலப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.