நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் சொத்து மற்றும் பொறுப்புக்கள் பற்றிய அறிவிப்புக்களை வழங்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிவிப்புக்களை கையளிக்காத அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
நாட்டில் 64 அரசியல் கட்சிகள் உள்ளன. இவற்றில் 50 அரசியல் கட்சிகள் கடந்த வருடத்துக்கான தமது சொத்து மதிப்புக்களை சமர்ப்பிக்கவில்லை.
தேர்தல்கள் ஆணைக்குழுவானது சகல அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த அறிவிப்புக்களை பெற்றுக் கொள்ள வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் சார்பில் இன்னமும் இந்தத் தகவல்களை வழங்காதுள்ளவர்கள் யார் என்பதை குறிப்பிட்டுக் கூறமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் சொத்து மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்களை சமர்ப்பித்துள்ளனர். எஞ்சியவர்கள் தமது விபரங்களை வழங்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.