நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களில் அவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாகனத்தில் பயணிப்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதனை அடையாளப்படுத்தும் வகையில் இவ்வாறு வாகனங்களில் அவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட உள்ளன.
பெரிய வர்ணப் புகைப்படம் ஒன்று வாகனத்தின் முன் பக்கத்தின் ஓர் மூலையில் ஒட்டப்பட உள்ளதுடன், இரவு நேரங்களிலும் தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில் ஆகூலின் கடதாசியில் இந்தப் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் யோசனைக்கு அமைய இந்த புகைப்படங்கள் வாகனங்களில் ஒட்டப்பட உள்ளன.
இதேவேளை, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் இரண்டு புகைப்படங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வகைப் புகைப்படம் ஒன்றுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்து ஆயிரம் ரூபா அறவீடு செய்யப்பட உள்ளது.
அடையாளத்தை உறுதி செய்யும் புகைப்படத்தை பெற்றுக் கொள்ள விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்திலிருந்து ஆயிரம் ரூபா அறவீடு செய்யப்பட உள்ளது.
இதுவரையில் சுமார் 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த புகைப்படத்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வித தடையும் இன்றி, சுய கௌரவத்தை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய வகையில் வாகனத்தில் பயணம் செய்ய இந்த புகைப்பட முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அண்மைய நாடாளுமன்ற சுற்று வட்டத்தில் இடம்பெற்ற போராட்டமொன்றின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் இடையூறு ஏற்படுத்தியதாகவும் தங்களது சிறப்புரிமை மீறப்பட்டதாகவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
இவ்வாறான நிலைமைகள் மீளவும் ஏற்படாமல் இருப்பதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு புகைப்படங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களின் அரச இலச்சினைக்கு பதிலாக இனி வரும் காலங்களில் புகைப்படங்கள் ஒட்டப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.