பொங்கல் பண்டிகையையொட்டி ஆந்திராவில் சேவல் சண்டை நடத்துவது வழக்கம். குறிப்பாக கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய 4 மாவட்டங்களில் சேவல் சண்டை பந்தயம் அதிகளவு நடைபெறும்.
இந்த நிலையில் காக்கி நாடாவை சேர்ந்த விலங்கியல் நல அமைப்பு, மேற்கு கோதாவரியை சேர்ந்த ஜெகஸ்குமார் ஆகியோர் சேவல் சண்டை பந்தயத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சேவல் சண்டை பந்தயத்துக்கு தடை விதித்தார்.
மேலும் சேவல் சண்டை பந்தயம் நடைபெறாமல் தடுக்க மண்டலங்கள் அளவில் ஒரு குழுவை நியமிக்க வேண்டும் அதில் கிராம நிர்வாக அதிகாரி, ஒரு சப்- இன்ஸ்பெக்டர், விலங்கியல் ஒரு அமைப்பை சேர்ந்த ஒருவர் இடம் பெற வேண்டும்.
அவர்கள் கிராமங்கள் தோறும் சென்று சேவல் சண்டை பந்தயம் நடைபெறுகிறதா என்று சோதனை நடத்த வேண்டும். பந்தயம் நடப்பது தெரியவந்தால் உடனே சேவல், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்ய வேண்டும்.
இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை வருகிற ஜனவரி 24-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். என்று கோர்ட்டு கூறி உள்ளது. இது தொடர்பாக விசாரணை பிப்ரவரி 6-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.