நடிகர் ராகவா லாரன்ஸ், படஅதிபர் ஆர்.பி.சவுத்ரி உள்பட திரையுலக பிரமுகர்கள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜை சந்தித்து பேசினார்கள். பின்னர் ராகவா லாரன்சும், ஆர்.பி.சவுத்ரியும் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ராகவா லாரன்ஸ் கூறியதாவது,
நான் நடித்துள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் படப்பிடிப்பு முடிந்து திரையிடுவதற்கு தயார்நிலையில் உள்ளது. ஆனால், படத்தை வெளியிடுவதில் சிக்கல் இருக்கிறது. படம் வெளியாக உதவி செய்யும்படி போலீஸ் கமிஷனரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். அவரும் உதவி செய்வதாக கூறினார். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை வேந்தர் மூவிஸ் அதிபர் மதனும், ‘சூப்பர் குட்ஸ்’ படநிறுவன அதிபர் ஆர்.பி.சவுத்ரியும் இணைந்து தயாரித்தனர். பின்னர் வேறொரு பிரச்சினைக்காக மதன் சிறைக்கு போய்விட்டார். அதன்பிறகு ஆர்.பி.சவுத்ரி படத்தை தயாரித்துள்ளார். மதன் சிறைக்கு போய்விட்டதால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிக்கலை தீர்த்து வைக்கக்கோரி போலீஸ் உதவியை கேட்டுள்ளோம்’.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் ஆர்.பி.சவுத்ரி, நிருபர்களிடம் கூறியதாவது,
வேந்தர் மூவிஸ் சார்பில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்கு பூஜை போட்டபோது, அந்த படத்தின் கதை வேறுவிதமாக இருந்தது. தற்போது நாங்கள் தெலுங்கில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘பட்டாசு’ என்ற படத்தை, தமிழில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற தலைப்பில் தயாரித்துள்ளோம். வேந்தர் மூவிஸ் தயாரித்த படம் வேறு. நாங்கள் இப்போது தயாரித்துள்ள படம் வேறு. இரண்டுக்கும் சம்பந்தமில்லை.
‘மொட்ட சிவா கெட்ட சிவா’ என்ற தலைப்பை வேந்தர் மூவிஸ் நிறுவனத்திடமிருந்து முறையாக வாங்கிவிட்டோம். வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் அதிபர் மதன் வேறொரு பிரச்சினையில் சிறைக்கு போய்விட்டதால், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதனிடமிருந்து படம் வெளியாவதற்கு அனுமதி தேவைப்படுகிறது. அந்த அனுமதியை பெற்றுத்தருவதற்கு போலீஸ் உதவியை நாடியிருக்கிறோம். போலீஸ் கமிஷனரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம். அவரும் உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். வேறு பிரச்சினை எதுவும் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.