காதல் செய்வீர்’ என்ற தமிழ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சஞ்சனா. தெலுங்கு, கன்னட மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி ஆவார். சஞ்சனா அளித்துள்ள சர்ச்சை பேட்டி விவரம் வருமாறு,
“மோட்டார் வாகனங்களை சாலைகளில் ஓட்டுவதற்கு லைசென்ஸ் இருக்கிறது. பொருட்களை உற்பத்தி செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கும் லைசென்ஸ் வழங்குகிறார்கள். இதுபோல் குழந்தை பெற்றுக்கொள்வதற்கும் லைசென்ஸ் வழங்க வேண்டும் என்பது எனது கருத்து.
நிறைய குழந்தைகள் ரோட்டில் பிச்சை எடுக்கும் அவல நிலையை பார்க்க முடிகிறது.
பிச்சை எடுக்க வைப்பதற்காகவே குழந்தை பெற்றுக்கொள்பவர்கள் இருக்கிறார்கள். இதன் மூலம் குழந்தை தொழிலாளர்கள் பெருகுகின்றனர். குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பதற்கு லைசென்ஸ் முறையை கொண்டு வருவது அவசியம். நான் தினமும் ரோட்டோரங்களில் வெயிலில் சுருண்டு விழுந்து கிடக்கும் குழந்தைகளை பார்க்கிறேன்.
அவர்களுக்கு பால் கிடையாது. நல்ல சாப்பாடு கிடையாது. உடுக்க உடை கிடையாது. அவர்களை பார்க்கும்போதெல்லாம் கண்களில் நீர் முட்டுகிறது. தாய்மார்களே குழந்தைகளை தூக்கி வந்து பிச்சை கேட்கிறார்கள். பிச்சை எடுப்பதற்காக வாடகைக்கும் கொடுக்கிறார்கள்.
இப்படிப்பட்ட பெண்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து இனிமேல் குழந்தையை பிச்சை எடுக்க அனுமதிக்க கூடாது என்று சொன்னால் கூட திருந்த மாட்டார்கள். இவர்களுக்கு குழந்தைகள் பெற்று வளர்க்க என்ன தகுதி இருக்கிறது. இந்த கொடுமைகளை தடுத்து நிறுத்துவது அவசியம். எனவேதான் லைசென்ஸ் முறை வேண்டும் என்கிறேன்.
குழந்தை பெற்று வளர்க்க தகுதி இருக்கிறதா என்று பார்த்து தகுதி இருப்பவர்களுக்கு மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். குழந்தையை வளர்க்க தகுதி இல்லாதவர்களுக்கு லைசென்ஸ் வழங்க கூடாது. மீறி அவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டால் தண்டனை வழங்க வேண்டும்.
நான் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து குழந்தை பெற்றுக்கொள்ள லைசென்ஸ் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தினேன். குழந்தையை வளர்க்க தகுதி இல்லாதவர்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ளவும் தகுதி இல்லை. இவ்வாறு சஞ்சனா கூறினார்.