தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த தேர்தல் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது. இதில் தலைவராக எஸ்.தாணு, செயலாளர்களாக டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர்களாக கதிரேசன், தேனப்பன், பொருளாளராக டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பில் உள்ளனர்.
இவர்கள் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 5-ந்தேதி நடக்கிறது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 8-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி முடிவடைகிறது. மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள், 13-ந்தேதி. இறுதி வேட்பாளர் பட்டியல் 18-ந்தேதி வெளியிடப்படும்.
இந்த தேர்தலில் 3 அணிகள் போட்டியிட தயாராகி வருகின்றன. ஒரு அணி சார்பில் சங்கத்தின் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார்.
இவரது அணியில் துணைத்தலைவர்கள் பதவிக்கு ஏ.எம்.ரத்னம், ஏ.எல்.அழகப்பன், செயலாளர்கள் பதவிக்கு கேயார், கதிரேசன் பொருளாளர் பதவிக்கு எஸ்.வி.சேகர் அல்லது கமீலா நாசர் போட்டியிடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இன்னொரு அணியில் டி.சிவா, தனஞ்செயன் உள்ளிட்ட சிலர் போட்டியிடுகிறார்கள். மற்றொரு அணியில் தலைவர் பதவிக்கு ராதாகிருஷ்ணனும், செயலாளர்கள் பதவிக்கு மன்னன், சிவசக்தி பாண்டியன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு நடிகை தேவயானியும் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. 21 பேரை கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 3 அணி சார்பிலும் 63 பேர் மோதுகிறார்கள்.
3 அணிகள் சார்பில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மொத்தம் 1,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 1,210 பேர் மட்டுமே ஓட்டுப்போட தகுதி உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.
நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட கடந்த 5 வருடத்துக்குள் சொந்தமாக படங்கள் தயாரித்து இருக்க வேண்டும் என்றும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறவர்கள் சொந்த படத்தை கடந்த 6 மாதத்துக்குள் தணிக்கை செய்தவராக இருக்க வேண்டும் என்றும் சங்க விதிமுறைகள் உள்ளன.