மருத்துவ பீடத்துக்கு யாழ்.போதனாவில் 8 மாடிக்கட்டடம்!

உயர் கல்வி அமைச்சின் 720 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மருத்துவ பீட கற்கை நெறிக்கான 8 மாடிகளை கொண்ட கட்டடத் தொகுதி யாழ் போதனா வைத்தியசாலையில் அமைக்கப்ப டவுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மருத்துவ பீட கற்கைநெறிக்கான கட்டடத் தொகுதியானது யாழ். போதனா வைத்தியசாலையின் மேற்குப் பகுதியில் மருத்துவப் பீடத்திற்கு ஒதுக்கப்பட்ட 4 பரப்பு காணியில் அமைக்கப்படவுள்ளது.

உயர்கல்வி அமைச்சின் 720 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 8 மாடிகளைக் கொண்டு அமைக்கப்படவுள்ளது. இக்கட்டடத் தொகுதியில் மருத்துவ பீட கற்கை நெறிகளுக்கான பல்வேறு பிரிவுகளின் காரியாலய அலகுகளும் மாணவர்களுக்கு கற்கை வசதி வழங்கக் கூடிய அலகுகளும் அமையவுள்ளது.

இக்கட்டிட அமைப்பு வேலைகள் பூரணமாக யாழ் மருத்துவ பீட நிருவாகத்தின் கீழ் அமையும். எனினும் நோயாளர் சேவை பிரிவுகள் இயங்கும் போது அவை முழுமையாக வைத்தியசாலைப் பணிப்பாளரின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

இக்கட்டிடத்தின் ஒரு தட்டில் அமைய இருக்கும் சத்திர சிகிச்சைக் கூடமும் மற்றும் ஆய்வு கூட வசதியும் பற்றி கருத்து முரண்பாடு எழுந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் கதைத்து சுமூகமான ஒர் முடிவு எட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் சில பத்திரிகைகள் மற்றும் வேறு ஊடகங்களில் திரிவுபடுத்தப்பட்டு செய்திகள் வெளிவந்தன. எனினும் அவ்வாறு இக்கட்டடத் தொகுதியினைக் கட்டுவதற்கு வைத்தியர்களோ ஏனையவர்களோ முட்டுக்கட்டை ஏற்படுத்தவில்லை.

அத்துடன் இக்கட்டடத் தொகுதியை அமைப்பதற்கு அனைத்து ஊழியர்களும் பூரண ஆதரவை வழங்குவார்கள் என தெரியப்படுத்தி உள்ளனர்என அவர் மேலும் தெரிவித்தார்.