ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டமைப்பு எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒத்துழைப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர்,
அனைத்து மாநகரங்கள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டமைப்பு போட்டியிடும்.
அனைத்துத் தேர்தல் தொகுதிகள் மற்றும் மாவட்டங்களுக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள கூட்டமைப்பு வேலைத் திட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்சியின் அடையாளத்தை பாதுகாத்து, இந்த தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.
தொகுதி மற்றும் விகிதசார முறையிலான கலப்பு நடைமுறையின் கீழ் உள்ளூட்சி மன்றத் தேர்தல் நடைபெறும். எதிர்வரும் பொதுத் தேர்தலும் இதே தேர்தல் முறையின் கீழ் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.