ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏழை-எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அரசை காங்கிரஸ் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.
இதனையடுத்து ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் சோனியா இறங்கினார். டெல்லியில் காங்கிரஸ் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
காங்கிரஸ் நேற்று நடத்திய கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட 8 கட்சிகள் மட்டுமே கலந்து கொண்டன. இடதுசாரிகள், தி.மு.க., சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளும் பங்கேற்கவில்லை.
ராகுல் காந்தியை விட மம்தா பானர்ஜி மிகவும் காட்டமாக பேசினார். மாயாவதி முதல் சோனியா காந்தி வரை எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுப்பதாக குற்றம்சாட்டினார்.
பிரதமர் மோடியின் பண மதிப்பிழக்க நடவடிக்கை ஒரு பெரிய ஊழல் என்று கலந்து கொண்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
ராகுல் காந்தி பேசுகையில், “பிரதமரின் தனிப்பட்ட விரும்பத்தின் பேரில் இந்த பொருளாதார பரிசோதனை வரலாற்றில் முதல் முறையாக செய்யப்பட்டுள்ளது. இது 130 கோடி மக்களை பாதித்துள்ளது. சீனாவில் மாசே துங் காலத்தில் கூட இது போன்ற பரிசோதனை செய்யப்படவில்லை” என்றார்.