5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி–5 ஏவுகணை சோதனை நேற்று ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக நடந்தது.
இந்த சோதனை சீனாவை குறி வைத்தே நடத்தப்பட்டது என்று பல்வேறு ஊடகங்கள் செய்திகள் வெளியானது.
இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறியதாவது,
ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்களில் உள்ள விதிகளுக்கு உட்பட்டு அக்னி-5 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டிருக்கும் என்று சீனா நம்புகிறது.
தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் அமைதி, அபிவிருத்தி ஏற்பட்டு ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் என்பதை சீனா எப்போதும் விரும்புகிறது. அக்னி-5 ஏவுகணையை இந்தியா சோதித்ததும், சில ஊடகங்கள், சீனாவை குறிவைத்தே இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தன.
அதேபோல், ஏவுகணை சோதனை தொடர்பான விவகாரத்தில் தன்னிச்சையாக வதந்திகளை பரப்புவதையும், தனது கருத்துகளை திணிப்பதிலும் ஊடகங்கள் ஈடுபடக் கூடாது. இந்தியா-சீனா இடையே புரிந்துணர்வு அதிகரிப்பதற்கும், இந்த பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை நிலவவும் ஊடகங்கள் அதிகளவு பங்களிப்புகளை அளிக்க வேண்டும். இவ்வாறு சுன்யிங் கூறினார்.
சீனாவின் நிலைப்பாட்டை தொடர்ந்து இந்தியாவும் தனது விளக்கத்தை அளித்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், “எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் குறிவைத்து அக்னி-5 ஏவுகணை சோதன நடத்தப்படவில்லை. சர்வதேச விதிகளின் படியே இந்த சோதனை நடத்தப்பட்டது” என்றார்.