2017ம் ஆண்டு மக்களுக்கு சிரமமானதாக அமையும் : மஹிந்த ராஜபக்ச

எதிர்வரும் 2017ம் ஆண்டு மக்களுக்கு சிரமமானதாக அமையும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிலரை நேற்று பார்வையிடச் சென்று திரும்பிய போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் …

நாட்டின் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றதனால் மக்களுக்கு நெருக்கடி நிலைமை ஏற்படும்.

தற்போது நாடு செல்லும் நிலையில் அடுத்த ஆண்டு துயரம் மிக்கதாகவே அமையும்.

வெற்றுக் காணி ஒன்றை துறைமுகமாக மாற்றியிருந்தோம். நாட்டுக்கு பெறுமதியை உருவாக்கியிருந்தோம்.எனினும் இந்த அரசாங்கம் அனைத்தையும் ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றது.

அபிவிருத்தி விசேட நியம சட்டம் அனைத்து மாகாண சபைகளினாலும் தோற்கடிக்கப்படும்.

வெட்கம் இருந்தால் இந்த சட்ட மூலத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும், அரசாங்கமும் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மக்களுக்கு போராட்டம் நடத்தும் உரிமையுண்டு, அண்மையில் 25000 ரூபா அபராதத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 19 பேரை அரசாங்கம் சிறையில் அடைத்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.