தென்ஆப்பிரிக்கா – இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. குயின்டான் டி காக் 37 ரன்களும், பிலாண்டர் 17 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இலங்கை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. 61 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கேப்டன் மேத்யூஸ் (39 ரன்), சன்டிமால் (28 ரன்), தனஞ்ஜெயா டி சில்வா (43 ரன், நாட்-அவுட்) உள்ளிட்டோர் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர்.
2-வது நாள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் பிலாண்டர் 3 விக்கெட்டுகளும், கைல் அப்போட் 2 விக்கெட்டுகளும், ரபடா, கேஷவ் மகராஜ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 3-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.