சென்னை ஓபன் டென்னிசில் பட்டத்தை வெல்ல முழு திறமையை வெளிப்படுத்துவேன்: ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுத் பேட்டி!

தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 2-ந்தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் முன்னணி வீரர்களில் தரவரிசையில் 14-வது இடம் வகிக்கும் ராபெர்ட்டா பாவ்டிஸ்டா அகுத்தும் (ஸ்பெயின்) ஒருவர்.

சென்னை ஓபன் குறித்து 28 வயதான அகுத் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: தொடர்ந்து சென்னை ஓபனில் பங்கேற்கிறீர்கள். இந்த தொடர் எந்த வகையில் உங்களுக்கு சிறப்பை தருகிறது?

பதில்: ரசிகர்களுடன் நெருங்கி இருப்பதாக உணருகிறேன். அவர்களின் ஆதரவு, களத்தில் எனது முழு ஆற்றலை வெளிக்கொண்டு வருகிறது.

கேள்வி: 2013-ம் ஆண்டில் இறுதிவரை போட்டி வந்து கோப்பையை கோட்டை விட்டீர்கள். சோகத்துக்கு முடிவு கட்டி, இந்த முறை வாகை சூட முடியும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: எப்போதுமே ஆட்டத்திறனில் முன்னேற்றம் கண்டு, இந்த போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதை எதிர்நோக்கித்தான் தயாராகுகிறேன். ஆனால் அது சவாலான விஷயமாகும்.

கேள்வி: உங்களது நீண்ட கால எதிரி குரோஷியாவின் போர்னா கோரிச்சும் களத்தில் இருக்கிறார். அவருக்கு எதிராக நீங்கள் உற்சாகமாக விளையாடி இருப்பதுடன் நிறைய வெற்றிகளையும் பெற்று இருக்கிறீர்கள். சென்னை ஓபனில் இருவரும் நேருக்கு நேர் மோதும் வகையில் அட்டவணை அமைந்தால், அது இந்த தொடரில் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய ஆட்டங்களில் ஒன்றாக இருக்கும். உங்களது பரம போட்டியாளரான அவரை பற்றி சொல்ல முடியுமா?

பதில்: அவர் சிறந்த வீரர். கடுமையாக போட்டி அளிக்கக்கூடியவர். அவருடன் மோதுவது மகிழ்ச்சியாக இருக்கும்.

கேள்வி: சென்னை ஓபனில் உங்களுக்கு மறக்க முடியாத ஆட்டம் எது?

பதில்: இறுதிப்போட்டியில் விளையாடியதை சொல்லலாம். ஆனால் இப்போது எனது முழு திறமையை வெளிப்படுத்தி பட்டத்தை வெல்ல முயற்சிப்பேன்.

கேள்வி: இந்த முறை சென்னை ஓபனில் உங்களுக்கு ‘குடைச்சல்’ கொடுக்கும் வீரராக யாரை கருதுகிறீர்கள்?

பதில்: நாம் 100 சதவீத திறமையை வெளிப்படுத்தாவிட்டால், ஒவ்வொரு வீரரும் அபாயகரமானவர்கள் தான்.

கேள்வி: ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பாக ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்பாக நடக்கும் இந்த போட்டி எந்த அளவுக்கு உங்களுக்கு முக்கியமானதாக அமைந்துள்ளது?

பதில்: புதிய சீசனின் முதல் போட்டியான இதில் அசத்தி விட்டால், அடுத்து வரும் போட்டிகளில் ரொம்ப ரிலாக்சாக செயல்பட முடியும்.

பிடித்த உணவு

கேள்வி: இந்திய உணவுகளை நீங்கள் ருசித்து சாப்பிடுவது உண்டு. உங்களுக்கு பிடித்தமான இந்திய உணவு எது?

பதில்: வெண்ணெயில் கலந்து தயாரிக்கப்பட்ட ‘நான்’ (ஒரு வகை ரொட்டி)

கேள்வி: ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?

பதில்: காத்திருங்கள். களத்தில் 100 சதவீத திறமையை பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.