வடக்கு-கிழக்கை இணைய விடோம்! எஸ்.பி

நாட்டின் சுயாதீனம் மற்றும் இறையாண்மையைப் பாதிக்கும் சமஷ்டி தீர்விற்கு செல்லவும், இரு மாகாணங்களை இணைத்து தனி இராஜ்ஜியமாக இன்னுமொரு நாடு உருவாகுவதற்கும் துளியளவும் இடமளிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான எஸ்.பி திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையும் அரசியல் யாப்பு ரீதியிலான எந்தவொரு மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ளப் போவது இல்லையென சமூகவலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியல் யாப்பில் எமது நாட்டின் ஒற்றையாட்சிக்கும், சிறுபான்மையின மதத் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ள பௌத்த மதத்திற்கான முன்னுரிமை அளித்து வழங்கப்பட்டுள்ள இடத்திற்கும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்த இடமளிக்கமாட்டோம். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை காணப்படுவதாலேயே 13ஆவது திருத்தத்தை யாப்பில் உள்ளடக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

நாடு பிளவடைவதை தடுக்கவும், இரண்டு மாகாண சபைகள் ஒன்றிணைந்து தனி இராச்சியம் ஒன்றை உருவாக்குவதை தடுப்பது தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். ஐக்கிய இலங்கைக்குள் சுயா தீனம் மற்றும் இறையாண்மையை பாதிக்கும் சமஷ்டி தீர்விற்கு செல்ல, நாட்டில் இன்னுமொரு நாடு உருவாக, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையும் மாற்றத்தை ஏற்படுத்த நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவது இல்லை எனவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, நடைபெறவுள்ள உள்@ராட்சி மன்றத் தேர்தல் புதிய தேர்தல் முறைமையிலேயே நடைபெறுமெனவும் அதற்கு தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அமைச்சர் எஸ்.பி இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.

தொகுதிவாரியான தேர்தல் முறையி லேயே உள்@ராட்சி மன்றத் தேர்தலை நடத்த தீர்மானித்துள்ளோம். அதில் சிறிதளவில் விகிதாசார பிரதிநிதித்துவத்தை சேர்த்துக் கொள்வது தொடர்பிலும் இணக்கம் காணப் பட்டுள்ளது. அதில் எவ்வித மாற்றமும் இல்லை. இரண்டு பிரதான கட்சிகளும் இதற்கு இணங்கியுள்ளன.

உள்@ராட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை புதிய முறையிலேயே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முழுமையான அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மையானவர்கள் தொகுதிவாரி முறையிலும் சிறு பகுதியினர் விகிதாசார அடிப்படையிலும் தெரிவாகும் வகையிலான புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தும் 20ஆவது யாப்பு திருத்தத்தை நிறைவேற்ற எதிர்ப்பார்க்கின்றோம் என்றார்.