நல்லாட்சி அரசாங்கத்தின் பயணத்தை சுதந்திரக் கட்சியே தடுக்கின்றது : பழனி திகாம்பரம்

நல்லாட்சி அரசாங்கத்தின் பயணத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே தடுக்கின்றது என மலையக புதிய கிராமம், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

இன்று(28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தின் முன்நகர்வுகளுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முட்டுக்கட்டைகளை போடுகின்றது.

அவ்வாறு தடையாக இருக்கும் சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு உடனடியாக விலகிக்கொள்ள வேண்டும்.

அத்துடன் ஜனவரி 8 மாற்றத்தின் பின்னர் நாடு முன்நோக்கி ஆரோக்கியமான நகர்வினை மேற்கொண்டு வருகின்றது.

இந்த மாற்றத்திற்கு ஆதரவளிக்காத ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் பயணத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

மேலும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பதவி விலகினாலும் ஐக்கிய தேசிய முன்னணியினால் அரசாங்கத்தை கொண்டு நடாத்த முடியும் என மலையக புதிய கிராமம், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.