புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக புலம்பெயர் சிங்களவர்கள் களத்தில்..

இலங்கைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் உலகம் முழுவதும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை முறியடிக்க புலம்பெயர் சிங்கள அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாக உலக இலங்கை பேரவை என்ற சிங்கள அமைப்பின் செயலாளர் நிஹல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

அஸ்கரிய மாநாயக்க பீடாதிபதி வரகாகொட ஞாரத்தன தேரருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை வெற்றிகொண்டு நாட்டை ஒற்றுமையாக்கி சமாதானமாக பயணிக்கும் இந்தத் தருணத்தில், அரசமைப்பு மறுசீரமைப்பினூடாக சமஸ்டி ஆட்சிக்கு செல்வது குறித்து மக்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டில் உள்ளவர்களை விட வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இது தொடர்பில் நல்ல புரிந்துணர்வுடன் செயற்படுகின்றதை பார்க்க முடிகின்றது.

எமது இறைமை இல்லாது போனால் எமது இனம் சர்வதேசத்தில் அசௌகரியத்துக்கு முகங்கொடுக்கும் நிலை ஏற்படும் என்பதை அவர்கள் அறிந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.