அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞரை சசிகலாவின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதால், முகம் முழுவதும் ரத்தம் வழிந்த நிலையில் பொலிசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு நாளை சென்னையில் கூடுகிறது. இப்பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால் சசிகலாவுக்கு கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சசிகலாவை எதிர்த்து சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனிடையே அதிமுக பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட மனு வாங்குவதற்காக அக்கட்சி தலைமை அலுவலகத்துக்கு சசிகலா புஷ்பா வரப்போவதாக இன்று பிற்பகல் தகவல் பரவியது.
இதையடுத்து வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோர் தமது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞரும், அவரது கணவர் லிங்கேஸ்வரனும் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் வந்ததாகவும், அவர்களை அடையாளம் கண்டு கொண்ட சசிகலா ஆதரவாளர்கள் கும்பல் அவரை சூழந்து கொண்டு அடித்து உதைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் லிங்கேஸ்வரனுக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. அவரை பொலிசார் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் அழைத்துச் சென்றுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.