கரும்பு விலையை உயர்த்தாவிட்டால் தி.மு.க. போராட்டம்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

“கரும்பு டன் ஒன்றுக்கு மாநில அரசின் பரிந்துரை விலையாக போக்குவரத்துச் செலவு 100 ரூபாய் உட்பட 2850 ரூபாய் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு வழங்கிய அதே கொள்முதல் விலையை 2016-17 ஆம் ஆண்டிற்கும் கொடுப்பதற்கு “கரும்புக்கான மாநில பரிந்துரை விலையை ஆலோசனை செய்யும் கூட்டம்” ஒன்றை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நடத்தி பழைய விலையே அறிவித்துள்ளார்.

கரும்பின் பரிந்துரை விலை உயர்வு என்பது வெறும் கண் துடைப்பாக அ.தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதைத் தான் இந்த கரும்புக்கு கொள்முதல் விலை நிர்ணயம் எடுத்துக் காட்டுகிறது. அதை விட ஏற்கனவே தி.மு.கழக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த தமிழக அரசின் கரும்பிற்கான ஊக்கத் தொகையை பார்த்தால் தற்போது அ.தி.மு.க. அரசு அறிவித்துள்ள விலை குறைந்தே உள்ளது.

2011 அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையின் 2 வது வாக்குறுதியே “தனியார் மற்றும் அரசு கரும்பு ஆலைகள் கொள்முதல் விலையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் ஆலை அதிபர்கள் பணப் பட்டுவாடா நிலுவையில் வைக்க அனுமதிக்கப்படமாட்டாது” என்பது தான்.

ஆனால் கடந்த ஐந்து வருட அ.தி.மு.க. ஆட்சியில் மட்டுமல்ல இப்போது 2016-ல் ஆட்சிக்கு வந்த பிறகும் கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலை உடனடியாக கொடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது. கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விடும் ஆட்சியை இப்போது முதல்- அமைச்சராக ஓ. பன்னீர் செல்வம் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பது மேலும் வேதனைக்குறியது.

“கரும்பு விவசாயிகளுக்கு பண பட்டுவாடா நிலுவையில் வைக்க அனுமதிக்கப்பட மாட்டாது” என்று வாக்குறுதி அளித்த ஆட்சியில் இப்போது 2000 கோடி ரூபாய்க்கு மேல் தனியார் கரும்பு ஆலைகளும், அரசு கூட்டுறவு கரும்பு ஆலைகளும் சேர்ந்தே பாக்கி வைத்திருக்கின்றன.

குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்புக்கு வழங்கப்படும் அரசு நிர்ணயித்த கொள்முதல் விலை கடந்த இரு வருடங்களாவே அளிக்கப்பட வில்லை. தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தியும் கூட இன்னமும் அங்குள்ள கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை பணம் சரிவர கொடுக்கப்படவில்லை என்ற செய்தி தான் வருகின்றது.

முத்தரப்புப் பேச்சு வார்த்தை என்பது முடிவு எட்டப்படாத பேச்சு வார்த்தையாகவே இந்த ஆட்சியில் தொடர்ந்து நடந்து வருகிறது. கரும்பு விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளுக்கும் சட்ட மன்றத்தில் தி.மு.கழக உறுப்பினர்கள் குரல் எழுப்பியும் அதனை இந்த அரசு ஏற்றுகொள்ளவேயில்லை என்பது இன்னும் வருத்தம் அளிக்கிறது.

தங்களுக்கான நிலுவைத் தொகையைக் கொடுக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம், போராட்டம் பற்றியெல்லாம் இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை. கரும்பு விவசாயிகளுக்கு தி.மு.க. ஆட்சியில் மாநில அரசின் ஊக்கத்தொகையாக 608 ரூபாய் வரை டன்னுக்கு வழங்கி வந்தது.

ஆனால் அ.தி.மு.க. அரசோ மத்திய அரசு நிர்ணயிக்கும் விலை உயரும் போதும், தொடர்ந்து கரும்பு விவசாயிகளுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகையை உயர்த்தாமல் இருப்பதும் அதனை குறைத்து கொண்டே போவதும் கரும்பு விவசாயிகளின் நலன் மீதோ, அவர்களின் முன்னேற்றம் மீதோ அ.தி.மு.க.அரசுக்கு அக்கறையில்லை என்பதை அறிவிக்கும் விதத்தில் இருக்கிறது. அதை விட சென்ற வருடம் வழங்கிய அதே விலையை கொடுத்திருப்பது ஒட்டுமொத்த கரும்பு விவசாயிகளையும் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

2011-ல் இருந்து “செயலற்ற ஆட்சி” அதிமுக தலைமையில் நடைபெறுகிறது என்று நான் ஏற்கனவே பல முறை சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன். அதே போல் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தன் தலைமையிலான அரசும் செயல்படாத அரசு தான் என்பதை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் உறுதி செய்திருக்கிறார் என்பதே இந்த கரும்பு கொள்முதல் விலை அறிவிப்பின் பின்னணியில் தெரிகிறது.

ஆகவே பொங்கல் திருநாள் கொண்டாடும் முன்னரே, அ.தி.மு.க. அரசு கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு டன் ஒன்றுக்கு 3500 ரூபாய் கொள்முதல் விலை கொடுக்கவும், உடனடி உத்தரவாக தனியார் மற்றும் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நிலுவையில் உள்ள தொகையை வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் விரைவில் அனைத்து கரும்பு விவசாயிகளையும் ஒன்றிணைத்து தி.மு.கழகம் போராட்டத்தில் ஈடுபடும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.