ரூபாய் நோட்டு துன்பம் டிச.30-ல் முடியாது…. ஏப்ரல் வரை நீடிக்கும் : ப.சிதம்பரம்!

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தற்போதைய துன்பம் டிசம்பர் 30-ந் தேதியுடன் முடிவடையாது; இந்த நிலைமை ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 8ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி மூலம் அறிவித்தார். ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்று கூறப்பட்டது. வங்கி வாசல்களில் மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.

புது ரூபாய் நோட்டின் வடிவம் புதிதாக இருப்பதால் ஏடிஎம் மெசின்கள் புதிதாக மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. 50 நாட்கள் ஆகிவிட்டது. இன்னமும் நிலைமை சீரடையவில்லை. மக்களின் வாங்கும் சக்தி குறைந்ததால் காய்கறிகள், பழங்கள் விலை குறைந்து விட்டது.

செல்லாத நோட்டு அறிவிப்பினால் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி,
பணம் மதிப்பு நீக்கம் பற்றிய அறிவிப்பு வெளியான உடனேயே நான் இதைப்பற்றி வெளியிட்ட அறிவிப்பில் இந்த நோக்கம் சரி, முடிவு சரியா என்பதை தீர்மானிக்க முடியாது என கேட்டேன். நான் கேட்ட 6 கேள்விகளுக்கும் இதுவரைக்கும் பதில் இல்லை என்றார்.

பண மதிப்பிழப்பு மூலம் 2400 கோடி தாள்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன. நமது அச்சுத்திறன் மாதத்திற்கு 300 கோடி தாள்கள் மட்டுமே. 2400 கோடி தாள்களை திரும்ப பெற்றுக்கொண்டு மாதத்திற்கு 300 கோடி தாள்கள் அச்சிடுகின்றனர். இது சரியாக 8 மாதம் ஆகும். பணத்தட்டுப்பாடு டிசம்பர் 30-ந் தேதியுடன் முடிவடையாது. ஏப்ரல் வரை நீடிக்கும்.

ஏடிஎம் என்பது ஒரு மெசின். அதை யோசிக்க வேண்டுமே. புது அளவில் பணத்தை அடிக்கிறோம். அது ஏடிஎம் மெசினில் சேருமா சேராதா? என்று யோசிக்க வேண்டாமா? நிதியமைச்சர் கையெழுத்து போட்டால்தான் அதை அச்சிட முடியும். பணத்தை ரிசர்வ் வங்கி அச்சிட்டாலும் பணத்தின் வடிவத்தை சரிபார்த்து கையெழுத்து போடுவது நிதியமைச்சர்தானே? எனவே ரிசர்வ் வங்கி மட்டுமே இதற்கு பொறுப்பு கிடையாது.

கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம் சரிதான். அது சரியில்லை என்று எப்படி செல்ல முடியும். ஊழல் ஒழிப்பு சரிதான். அரசை எதிர்த்தால் அது அது தேச விரோதம், பாகிஸ்தான் ஆதரவாளர் என்று கூறுவது எல்லாம் சுதந்திரம் பெற்ற குடியரசு நாட்டில் நிர்தாட்சண்யமாக மறுக்க வேண்டிய வறட்டு வாதங்கள்.

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று கூறினாலும் ஆளும் பாஜக அரசு விவாதம் நடத்தாமல் இருப்பதற்கு காரணம், அவர்களின் தோழமை கட்சிகளே இதை எதிர்க்கின்றன என்பதுதான். வாக்கெடுப்பு நடத்தினால் பாஜக வெற்றி பெறும். ஆனால் அவர்களின் தோழமை கட்சிகள் ஆளும் பாஜகவிற்கு எதிராகவே வாக்களிக்கும் இவ்வாறு சிதம்பரம் கூறினார்.