அர்ச்சுனன் கர்வம் நீக்கிய ஆஞ்சநேயர்!

மகாபாரத காலத்தில் ராமரை தரிசிக்க வேண்டும் என்பதற்காக, பூமியில் ராமனை நினைத்து தவ வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார் அனுமன். அமைதி தவழ்ந்து கொண்டிருந்த நதிக்கரையோரம் அது. ஒரு நாள் அந்த வழியாக வந்தான் அர்ச்சுனன். அப்போது மரத்தில் அமர்ந்து ராமரை நினைத்து தியானித்துக் கொண்டிருந்த ஆஞ்சநேயர் அவன் கண்ணில் பட்டார். அவரைப் பார்த்து, ‘வானரரே! தாங்கள் யார்?’ என்று வினவினான்.

அர்ச்சுனன் யார் என்பதை தன் தவ வலிமையால் உணர்ந்து கொண்ட ஆஞ்சநேயர், ‘அர்ச்சுனா! நான் ராமாயண காலத்தில் ராமனுக்கு தூதுவனாக இருந்த ஆஞ்சநேயன்’ என்று பதிலுரைத்தார். அவரை பற்றி பல வழிகளிலும் கேள்விப்பட்டிருந்த அர்ச்சுனன் அவரிடம் தலைதாழ்ந்து தனது வணக்கத்தை தெரிவித்தான். அப்போது அவனுக்குள் இருந்த கர்வம் விழித்துக் கொண்டது.

‘வாயு புத்திரரே! ராமாயண காலத்தில் சீதாதேவியை தேடி இலங்கைக்கு அனைவரும் புறப்பட்டபோது, கடலுக்கு நடுவில் வானரங்களை கொண்டு கல்லால் பாலம் அமைத்ததாக கேள்வியுற்றேன். ராமர் சிறந்த வில்லாளி என்று அறிந்தேன். ஆனால் அவர் தனது வில்லை நம்பாமல், வானரங்களை வைத்து கல் பாலத்தை அமைத்ததைப் பார்த்தால், ராமர் சிறந்த வில் வித்தை வீரர் இல்லை என்பதுபோல் தோன்றுகிறதே!’ என்று கேள்வி எழுப்பினான்.

ராமனே சித்தம் என்று நித்தமும் எண்ணிக் கொண்டிருக்கும் அனுமனிடம், அர்ச்சுனன் இப்படி ராமரின் திறமையை பரிகசித்து பேசி, எகத்தாளமாக கேள்வி எழுப்பியதும், அவருக்கு கோபம் வந்து விட்டது. கண்ணனின் திறமையை அறிந்திருந்த அர்ச்சுனனுக்கு, ராமரின் திறமை புரியவில்லை. ஏனெனில் அவன் கண்ணனும், ராமரும் வேறுவேறு என்று நினைத்து விட்டான்.

‘அர்ச்சுனா! ராமர் நினைத்திருந்தால் பாலம் அமைத்து தான் அங்கு செல்ல வேண்டும் என்பதே இல்லை. அவர் நினைத்தால் அந்த நிமிடமே நினைத்த இடத்தில் இருக்கும் வல்லமை பெற்றவர். அப்படிப்பட்டவரை நீ இகழ்வாக பேசி விட்டாய். உன்னால் அனைவரையும் தாங்கும் ஒரு பாலத்தை அம்பால் அமைக்க முடியுமா?, அப்படி அமைத்தாலும் அது என் ஒருவனின் கட்டை விரல் சுமையையாவது தாங்குமா?. அப்படி தாங்கி விட்டால் மகாபாரத போரில் உனது தேரில் கொடியாக இருந்து உனக்கு உதவி புரிகிறேன்’ என்றார் ஆஞ்சநேயர்.

‘ஏன் முடியாது? என் திறமை தெரியாமல் பேசுகிறீர்கள். என்னால் எதுவும் முடியும். இப்போதே இந்த நதியில் என் வில்லின் சக்தி கொண்டு ஒரு பாலம் அமைக்கிறேன்’ என்று கூறிஇ அம்புகளை சரமாரியாக தொடுத்து கண நேரத்தில் ஒரு அம்பு பாலத்தை கட்டி முடித்தான் அர்ச்சுனன். பின்னர், வானரரே! இப்போது இதில் ஏறி குதித்து விளையாடும், அங்கும் இங்கும் ஓடும். அப்போது என் திறமையை உணர்ந்து கொள்வீர். பாலம் உடைந்து விட்டால் நான் இங்கேயே தீயில் இறங்கி உயிரை மாய்த்துக் கொள்கிறேன்’ என்று மீண்டும் ஆணவம் பொங்க பேசினான்.

இதைக் கேட்டு நகைப்புடன், ராம ராம என்று துதித்த படி தனது வலது காலின் கட்டை விரலை அந்த அம்பு பாலத்தின் மீது வைத்து அழுத்தினார் ஆஞ்சநேயர். அது மண் மாளிகை போன்று பொலபொலவென சரிந்து விழுந்தது. இதனை பார்த்ததும் அர்ச்சுனனின் முகம் கறுத்துப் போயிற்று. தன் திறமை என்னவானது என்று எண்ணினான். தன் ஆணவப் பேச்சுக்கு விழுந்த அடியால் துவண்டு போனான்.

பின் தான் அழித்த வாக்குறுதிப்படி தீக்குளிக்க முயன்றான். அப்போது அந்தணர் உருவில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் அர்ச்சுனன் தீக்குளிக்க முயலும் காரணத்தைக் கேட்டார். அப்போது நடந்த விவரங்களை அர்ச்சுனன் கூறினான். அதற்கு அந்த அந்தணர், ‘நடுவர் ஒரு வரும் இல்லாமல் எப்படி போட்டி நடத்தி வெற்றி தோல்வியை நிர்ணயிப்பீர்கள். எனவே போட்டி மீண்டும் நடைபெறட்டும். நான் நடுவராக இருந்து தீர்ப்பு கூறுகிறேன்’ என்று கூறினார்.

அதன்படி மீண்டும் போட்டி நடந்தது. அர்ச்சுனன் இப்போது கண்ணனை நினைத்தபடி மீண்டும் தனது வில்லை எடுத்து அம்பு மழை பொழியச் செய்து பாலத்தை கட்டி முடித்தான். ஆஞ்சநேயர் அதனை காலால் மிதித்தார். ஆச்சரியம் பாலம் உடையவில்லை. ஏறி நின்று குதித்தார். தனது திறமையை எல்லாம் காட்டினார். ஆனால் அந்த பாலம் அசையவில்லை. ஆஞ்சநேயர் திகைத்து போனார்.

அப்போது அந்தணர் உருவில் இருந்த கண்ணன் சுயஉருவை காட்டி இருவருக்கும் அருள்புரிந்தார். மேலும் அனுமனே நீ கூறியபடியே மகாபாரத போரில் அர்ச்சுனன் தேரில் கொடியாக இருந்து அவனுக்கு உதவியாக இரு! என்று கூறினார். அப்போது ஆஞ்சநேயர் தனது தவத்தை தெரிவித்ததும், அவருக்கு ராமராகவும் காட்சியளித்தார். அந்த திருக்காட்சியை கண்டு ஆஞ்சநேயரும், அர்ச்சுனனும் ஆனந்தத்தில் திளைத்தனர்.