மக்களுக்கு பொருத்து வீடுகள் வேண்டும் என்றால் அவர்களது விருப்பப்படி நாம் அவர்களுக்கு வீடுகளை வழங்குவோம் என மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, கற்பகபுரம் பகுதியில் மக்களுக்கு காணிப்பத்திரங்கள் வழங்கிய போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு அபிவிருத்தி தொடர்பில் வடமாகாண சபையுடன் பேசவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பில் தங்களின் பதில் என்ன என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது,
வடமாகாணசபையுடன் எந்த பிரச்சனையும் இல்லை. வடமாகாண சபைக்கு செய்ய வேண்டிய சலுகைகள் எல்லாம் கூறியிருக்கின்றோம். அவர்களுக்கு ஏதாவது தேவை என்றால் நேரடியாக என்னுடைய அமைச்சுக்கு அனுப்பலாம். அவர்களது கோரிக்கைகள் எல்லாவற்றையும் நாங்கள் நிறைவேற்றுவதற்கு முன்வந்துள்ளோம். அவர்களுக்கு வேறு கோரிக்கைள் இருந்தால் அந்த கோரிக்கைகளை எங்களிடம் கொடுத்தால் அந்த கோரிக்கையின் படி நான் நடப்பேன் என கூறுகின்றேன்.
பொருத்து வீடுகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கும் நிலையில் தாங்கள் அதனை நடைமுறைப்படுத்த முயல்வது ஏன் என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது,
அரசாங்கம் அதாவது ஜனாதிபதி கூறியது என்னவென்றால் மக்களுடைய விருப்பத்துக்கு ஏற்றவாறு அந்த மக்களுக்கு வீடுகள் வேண்டும் என்றால் அதை நாம் கொடுப்போம்.
அதன்படி தான் செய்கின்றோம். அரசியல் தீர்ப்பை நான் கொண்டுவரவில்லை. அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் நான் கதைக்க விரும்பவில்லை. நாங்கள் செய்ய வேண்டிய கடமையைத் தான் செய்து கொண்டு வருகின்றோம் எனத் தெரிவித்தார்.