எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கு கொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து 2017ஆம் ஆண்டில் முதற்கட்ட காணி விடுவிப்புத் தொடர்பான முக்கிய அறிவிப்பினையும் செய்யவுள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அமைச்சர்கள் பலர் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக செல்லவுள்ளனர்.
ஜனாதிபதி நாட்டில் முதலாவதாக தன்னுடைய நேரடி கண்காணிப்பில் வடமாகாணத்திற்கானதாக இயங்கும் குறைகேள் மையத்தினை யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்திற்குள் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் திறந்து வைக்கவுள்ளார்.
மேலும் யாழ்ப்பாணம் கோட்டையில் மரநடுகை நிகழ்விலும் கலந்து கொண்டு மரங்களை நாட்டி வைக்கவுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியேற்றப்பட்ட வீட்டுத்திட்டத்தினையும் ஜனாதிபதி பயனாளிகளிடம் கையளிக்கவுள்ளார்.
இந்த நிகழ்வானது பலாலி வடக்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் போது மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தெல்லிப்பளை பிரதேச செலயர் பிரிவில் 136 வீடுகளும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவு வளலாயில் 101 வீடுகளும் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளிற்கான முன் ஏற்பாடுகள் யாழ்.மாவட்டச் செயலகத்தின் ஊடாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குறித்த வீட்டுத்திட்ட கையளிப்பு நிகழ்வில் வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து அடுத்த கட்ட மீள்குடியேற்றத்திற்காக இனங்காணப்பட்ட காணி விடுவிப்புத் தொடர்பான அறிவித்தலை விடுவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.