மெல்போர்ன் டெஸ்டில் அசார் அலி இரட்டை சதம்: வார்னர் பதிலடி!

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்ன் நகரில் கடந்த 26-ந்தேதி (நேற்று முன்தினம்) தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இரண்டு நாட்களில் பெரும்பாலான நேரம் மழையினால் பாதிக்கப்பட்டது.

நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி 139 ரன்னுடனும், மொகமது ஆமிர் 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கினார்கள். ஆமிர் மேலும் ஒரு ரன்கள் எடுத்து 29 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து சோகைல் கான் அசார் அலியுடன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி 9-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தது. சோகைல் கான் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அசார் அலி சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். கடைசியாக வந்த வஹாப் ரியாஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 443 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

அசார் அலி 205 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணியில் பேர்டு மற்றும் ஹசில்வுட் ஆகியோர் அதிகபட்சமாக தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரென்ஷா மற்றும் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரென்ஷா 10 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால், வார்னர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். 113 பந்தில் 13 பவுண்டரியுடன் சதம் அடித்த அவர் 143 பந்தில் 17 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 144 ரன்கள் குவித்தார்.


இவரது அதிரடியால் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்துள்ளது. கவாஜா 95 ரன்னுடனும், கேப்டன் ஸ்மித் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை ஆஸ்திரேலியா 165 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 8 விக்கெட்டுக்கள் உள்ளதால் நாளை அதிரடியாக விளையாடி 250 ரன்கள் முன்னிலைப் பெற்றால் மெல்போர்ன் டெஸ்டில் முடிவு கிடைக்க வாய்ப்புள்ளது.