காயத்தில் இருந்து மீண்ட ரோகித் சர்மா ரஞ்சி அணியில் சேர்ப்பு!

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா. நியூசிலாந்து அணிக்கெதிராக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. அந்த காயத்திற்கு  லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இதனால் தற்போது ஓய்வில் இருக்கும் அவர், இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவில்லை. தற்போது அவர் பூரண குணம் அடைந்து விட்டார்.

இதனால் வரும் 15-ந்தேதி இங்கிலாந்திற்கு எதிரான நடக்கவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பி.சி.சி.ஐ. தற்போது காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடி உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே சீனியர் அணியில் இடம் என்ற கொள்கையை வகுத்துள்ளது.

இதனால் ரோகித் சர்மா ரஞ்சி டிராபியில் விளையாட விரும்பினார். தற்போது ரஞ்சி டிராபியின் அரையிறுதி வருகிற ஞாயிற்றுக்கிழமை (1-ந்தேதி) தொடங்குகிறது. ஒரு அரையிறுதியில் மும்பை – தமிழ்நாடு அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.

ரோகித் சர்மா மும்பை அணிக்காக விளையாடக்கூடியவர். இதனால் அவர் தற்போது ரஞ்சி டிராபிக்கான மும்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதில் சிறப்பாக விளையாடினால் இங்கிலாந்து, அதனைத்தொடர்ந்து வரும் ஆஸ்திரேலியா தொடரில இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.