சுந்தர்.சி இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகிறது ‘சங்கமித்ரா’ எனும் சரித்திரப் படம். பட்ஜெட் ரூ 250 கோடி. சுந்தர் சி தனது கேரியரில் இத்தனை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கும் முதல் படம். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 100வது படம் இது என்பதால் இத்தனை பிரமாண்டமாம்.
இதில் நடிப்பதற்காக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் 250 நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதால் பலரும் தயங்கினார்கள். இதனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமாகின.
தற்போது, ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். ‘சங்கமித்ரா’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2017-ல் தொடங்குகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன் உள்பட பலரும் பணியாற்றி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாகும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. தேனாண்டாள் நிறுவனம்தான் வெளியிட்டுள்ளது.
இதில் முதலில் ஏ ஆர் ரஹ்மான் பெயரும், அடுத்து ஜெயம் ரவி, ஆர்யா, கடைசியில் இயக்குநர் சுந்தர் சி பெயர் இடம்பெற்றுள்ளது. இது சலசலப்பைக் கிளப்பியுள்ளது. படமே தொடங்கவில்லை அதற்குள் இயக்குநரை பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள் தயாரிப்பாளர்கள். ரஹ்மானை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? முதலில் இயக்குநர், அடுத்து ரஹ்மான் என்றல்லவா இருக்க வேண்டும்? இதுவே ஷங்கர் இயக்குநராக இருந்திருந்தால் இப்படிச் செய்வார்களா? என்று கேட்கிறார்கள் சுந்தர் தரப்பில்.
‘அப்படி எதுவும் இல்லை. இயக்குநர் பெயரை டைட்டிலில் கடைசியில்தான் போடுகிறோம். அதற்காக அவரை பின்னுக்குத் தள்ளிவிட்டதாக அர்த்தமா?’ என்று கேட்கிறார்கள் கதை விவாதத்தில் பங்கேற்றுள்ள சிலர்.