மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் கே.ஆர்.விஜயா!

தமிழ் பட உலகில் 1960 மற்றும் 70-களில், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட கதாநாயகர்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்தவர் கே.ஆர்.விஜயா. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். ரசிகர்களால் புன்னகை அரசி என்று அழைக்கப்பட்டார். கே.ஆர்.விஜயாவுக்கு தற்போது 68 வயது ஆகிறது.

கடந்த 15 வருடங்களாக கே.ஆர்.விஜயா சினிமாவில் தீவிரமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். ரஜினிகாந்தின் சந்திரமுகி, கமல்ஹாசனின் தசாவதாரம் உள்ளிட்ட சில படங்களில் மட்டும் ஓரிரு காட்சிகளில் குணசித்ர வேடங்களில் தலைகாட்டினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு கே.ஆர்.விஜயா ‘மாயமோகினி’ என்ற படம் மூலம் மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.

இந்த படத்தில் அவர் பெண் சித்தராக வருகிறார். அவர் நடித்த காட்சிகள் வந்தவாசி அருகே படமாக்கப்பட்டு உள்ளன. இந்த படத்தை ராசா விக்ரம் டைரக்டு செய்கிறார். தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க முடிவு செய்து இருப்பதாக கே.ஆர்.விஜயா தெரிவித்தார்.

மாயமோகினி படம் பற்றி டைரக்டர் ராசா விக்ரம் கூறியதாவது:-

“விட்டலாச்சாரியார் பாணியில் திகில் படமாக மாயமோகினி தயாராகி உள்ளது. முன் ஜென்மத்தில் காதல் கைகூடாமல் இறந்த இளம்பெண் மோகினியாக மாறி இந்த ஜென்மத்தில் அவளுடைய காதலனை அடைய முயற்சிப்பதும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுமே கதை.

இதில் கதாநாயகனாக குஷ்புவின் சகோதரர் அப்துல்லாவும், மோகினியாக சாரிகாவும் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் தங்கவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தில் பெண் சித்தராக நடிக்க வேண்டும் என்று கே.ஆர்.விஜயாவை அணுகினோம். அவரும் கதையை கேட்டு பிடித்துப்போய் நடிக்க சம்மதித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் அவர் நடித்து இருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.