அதிகமுக பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சசிகலா பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்த ஜெயலலிதாவுக்கு அதிமுக தொண்டர்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு சசிகலாவுக்கு இல்லை.
கட்சி உறுப்பினராக சசிகலா இருந்தபோதே அவர் மீது சொத்துகுவிப்பு வழக்கு மற்றும் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர் என்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது இருந்ததால் அதனையெல்லாம் தவிடுபொடியாக்கி அதிமுக தொண்டர்களின் மனதில் இடம்பிடிப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.
சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு, சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து சில இடங்களில்அதிருப்தி வெளிப்படுத்தியுள்ள அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் எண்ணிக்கை கூடுமா ஆகியவை, இனி வரும் நாட்களில் சசிகலா சந்திக்கும் முக்கிய சவால்களாக அமையும்.
மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து மர்மம் நிலவுவதாகவும், அவரது மரணம் தொடர்பான சந்தேகங்களைத் தெளிவுபடுத்த மாநில அரசு தவறிவிட்டதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு கூறியுள்ளது.
எனவே அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கும் இவர், இதனை எவ்வாறு அணுகப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது வரை ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலா, நிஜமான அவதாரம் எடுத்துள்ளதால், ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இவரது உறவினர்களால் இவருக்கு சாதகம் ஏற்படுமா? அல்லது பாதகம் ஏற்படுமா? என்பது இவரது கட்சியை வழிப்படுத்துவதிலேயே தெரியவரும்.
இவை அனைத்திற்கும் மேலாக, இதுவரை எந்த ஒரு கூட்டங்களிலும் அரசியல் குறித்த கருத்துக்கள் மற்றும் அரசியல் சம்பந்தமான விமர்சனங்களையே தெரிவிக்காத இவர், இனி வரும் காலத்தில் அவரது செயற்பாடுகளை வைத்து அவர் அரசியல் சாதுர்யம் படைத்தவரா என்பது தெரியவரும்.