சசிகலாவிடம் பேட்டி எடுத்த போது நான் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் மிகவும் நிதானமாகவும், நேர்மையாகவும் பதிலளித்தார் என திருநங்கை அப்சரா ரெட்டி கூறியுள்ளார்.
பல்வேறு பிரபலங்களை பேட்டி கண்டுள்ள திருநங்கை அப்சரா ரெட்டி, தனது ‘ப்ரவோக்’ மாத இதழுக்காக சசிகலாவிடம் சுமார் 45 நிமிடம் பேட்டி எடுத்துள்ளார்.
இதுகுறித்து அப்சரா கூறியதாவது, சுமார் 4 மாதங்களுக்கு முன்னரே சசிகலாவிடம் பேட்டி எடுப்பதற்கு அனுமதி கேட்டிருந்தேன். ஆனால் ஜெயலலிதா இறந்து 10 நாட்களுக்கு பிறகு அவர் சம்மதம் தெரிவித்தார்.
5 நிமிடங்கள் மட்டும் போதும் என அவரிடம் கூறினேன். ஆனால் என்னோடு 45 நிமிடங்கள் மனம் விட்டு பேசினார்.
ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட நட்பு முதல் அப்பல்லோவில் கரைந்த நிமிடங்கள் வரை அனைத்தையும் வெளிப்படையாக கூறினார்.
மேலும், நான் கட்சி பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால், அக்கா உயிரோடு இருக்கும்போதே அதனை கேட்டு பெற்றிருக்க முடியும். ஆனால் தற்போது வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் கட்சியில் இருக்கிறேன் என கூறினார்.
மேலும், தன்னைப்பற்றி வரும் வதந்திகளுக்கு உணர்ச்சிவசப்படாமல் இருக்கும் அளவுக்கு பக்குவப்பட்டிருக்கிறார் என அப்சரா கூறியுள்ளார்.