மூன்று விடயங்களில் இன்று தமிழருக்குப் பெரும் சவால்!

பெண்களின் வாழ்வாதாரம், இளைஞர்களின் வேலைவாய்ப்பு, மாணவர்களின் கல்வி ஆகிய மூன்று விடயங்களும் தமிழ் இனத்துக்கு விடப்படும் சவாலாக அமைந்துள்ளன. இதனை முறியடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மறைக்கல்வி நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் அருட் கலாநிதி ஸ்ரனி அன்ரனி தலைமையில் பகிர்வு விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

போர் பாதிப்புக் காரணமாக எமது மக்கள் உரிமைகள், சொத்துக்களை இழந்து வாழ்க்கைக்காகத் தவிக்கும் போது எமது மக்களினதும், மாணவர்களினதும் எதிர்காலம் கருதிச் செயல்படும் சங்கங்களுக்கு நன்றி கூறவேண்டும்.

இங்கு இடம்பெற்ற கொடிய போருக்குப் பின்பும் எமது இனம் நிமிர்ந்து நிற்பதற்கு மாணவர்களின் கல்வியே முக்கியம்.

எனவே, இந்த மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவேண்டியது எமது கடமை.

ஆனால், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள எமது மாணவர்கள் இன்றும் போர் வடுவிலிருந்து மீளமுடியாது தவிக்கின்றனர்.

பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் எமது மாகாணத்தில் அதிகம் காணப்படுகின்றனர்.

அதிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிகம் பெண் தலைமைத்துவக் குடும்பங்களே காணப்படுகின்றனர்.

இவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இன்னுமோர் இனத்திடம் கையேந்தவிடாது சம உரிமையுடன் உயர்த்தவேண்டிய முக்கியமான ஒரு பணி எம்முன் உள்ளது.

அரச வேலை வாய்ப்புக்கள் என்பது கடந்த காலத்தில் பெரும்பாலும் அரசியல் சார்ந்த்தாகவே காணப்பட்டன.

அதே நிலவரம் தற்போதும் தொடர்கின்றது. எமது இளையோர் அரச வேலை வாய்ப்பை நம்பி நம்பியே ஏமாந்து அரைவாசி ஆயுள் காலத்தை இழந்து விடுகின்றார்கள். ஆனால், எமது பிரதேசமோ வேலைவாய்ப்பின்றியே காணப்படுகின்றது.

இன்றைய சூழலில் வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்தி வாழ்வாதாரங்களை உயர்த்துவதோடு மாணவர்களின் கல்வியை வளம் பெறச் செய்வதன் மூலமே இந்த இனத்தை காத்துக்கொள்ள முடியும்.

அதற்குரிய வசதிகளை ஏற்படுத்தும் வல்லமையும் எமது இனத்திடம் உண்டு.

தொழிற்சாலைகள் அமைத்து வேலை வாய்ப்புக்களை வழங்கும் வல்லமை எமது புலம்பெயர் மக்களிடம் உண்டு. அவர்களும் இதற்கு முன்வரவேண்டும்.

ஆயுதரீதியில் அடக்கப்பட்ட எமது இனத்தை இன்று பொருளாதார ரீதியிலும் அடக்கும் நோக்கில் எமது மக்களை கையேந்துபவர்களாக வைத்திருக்கவே முயல்கின்றனர்.

இவ்வாறு கல்வி, வாழ்வாதாரம், பொருளாதாரம் என்பனவற்றில் எமது இனம் திட்டமிட்டே அழிக்கப்படுகின்றது.

இந்த மூன்று விடயங்களிலும் விடப்படும் சவாலை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், புலம்பெயர் தேசத்தவர்கள் ஆகிய 3 பகுதியினரும் முயற்சித்தால் எமது இனத்துக்கு விடப்பட்டுள்ள இந்தப் பெரும் சவாலை முறியடிக்க முடியும் என சார்ள்ஸ் நிர்மலநாதன் இதன்போது கூறினார்.