விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொள்வாரா என கேள்வியெழுப்பட்டுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார். கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், விஜயகலா மகேஸ்வரன் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவ்வாறான நிலையில், தமது கட்சி உறுப்பினரின் கருத்தை கட்சி தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுகொள்வாரா..?
எவ்வாறாயினும், தெற்கில் ஒரு கருத்தையும், வடக்கில் ஒரு கருத்தையும், கொண்டிருப்பதுதான் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில், கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்தால், அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவராக இருப்பார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.