படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாடி ஒலிப்பதிவுகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விடயம் குறித்து உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இந்நிலையில் கடந்த 29ம் திகதி வெளிநாட்டு ஊடக நிறுவனங்களில் செய்தியாளர்களை மஹிந்த சந்தித்துப் பேசியிருந்தார். இதன்போது லசந்தவுடனான தொலைபேசி உரையாடல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு மஹிந்த விளக்கம் அளித்துள்ளார்.
கேள்வி – ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் தங்களுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைப்பேசி உரையாடல் வெளியாகியுள்ளது, அதனை நீங்களா வெளியிட்டீர்கள்? அதனை செவிமடுத்தீர்களா?
பதில் – நான் அவ்வாறான ஒன்றை வெளியிடவில்லை. எனக்கு கேட்பதற்கு முடியாமல் போய்விட்டது. எனினும் அது குறித்து என்னால் அறிந்துக் கொள்ள முடிந்தன.
கேள்வி – அந்த பதிவு இந்த நேரத்தில் எதற்காக வெளியிடப்பட்டுள்ளதென நீங்கள் நீனைக்கின்றீர்கள்?
பதில் – எனக்கு தெரியாது, அதனை தேட வேண்டும் என்பது எனக்கும் அவசியமாகும். அந்த ஒலிப்பதிவு ஒன்று சண்டே லீடர் ஆசிரியரின் குழுவிடம் காணப்பட வேண்டும். அல்லது அரசாங்க புலனாய்வு பிரிவினரிடமே காணப்பட வேண்டும்.
கேள்வி – அப்படி என்றால் தாங்கள் ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் அரசாங்க புலனாய்வு பிரிவு தங்களின் தொலைப்பேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்டு, பதிவு செய்தார்களா?
பதில் – இல்லை லசந்த தான் பதிவு செய்தார். அவ்வாறான பழக்கம் ஒன்று அவருக்கு காணப்பட்டது. நீங்களும் அப்படி செய்வீர்கள் அல்லவா? லசந்தவுக்கும் அவ்வாறான ஒரு பழக்கம் உண்டு. அந்த காலப்பகுதியில் அவர் எனக்கும் அவ்வாறான ஒலிப்பதிவுகளை வழங்கியுள்ளார். பல்வேறு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நபர்களின் ஒலிப்பதிவுகளை லசந்த வழங்கியுள்ளார். லசந்த எனது நண்பர்.
கேள்வி – புலனாய்வு பிரிவின் கடிதம் உட்பட இணையத்தளங்களில் பதிவாகியிருந்தன. அந்த நாட்களில் கிடைத்த உத்தரவிற்கமைய லசந்த உட்பட மேலும் பலரின் தொலைப்பேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளனவா?
பதில் – நாங்கள் யாருடைய தொலைப்பேசிகளையும் பதிவு செய்யவில்லை. அரசாங்க புலனாய்வு பிரிவினரால் எனது தொலைப்பேசி அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டதா என்று தெரியவில்லை?
கேள்வி – அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அப்படி செய்தாரா?
பதில் – அவர் ஏன் அப்படி செய்ய வேண்டும்? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதிலளித்துள்ளார்.