ரஷியா, துருக்கி ஆதரவுடன் சிரியாவில் சண்டை நிறுத்தம் அமுல்!

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு, மார்ச் 15-ந் தேதி உள்நாட்டுப்போர் தொடங்கியது. அது, தொடர்ந்து 6-வது ஆண்டாக நடந்து வந்தது. இந்தப் போரினால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பல லட்சம் பேர் வீடுகளை விட்டு, உயிர் பிழைக்க இடம் பெயர்ந்தனர்.

இந்த நிலையில் ரஷியா, துருக்கி ஆதரவுடன் இரு தரப்புக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. “இது உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டு வந்து, அரசியல் தீர்வு காண்பதற்கு உண்மையான வாய்ப்பாக அமையும்” என சிரியா அரசு கூறியது.

இந்த சண்டை நிறுத்தம் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி இரவு 10 மணிக்கு அமலுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து அங்கு இத்தனை ஆண்டுகாலமாக இருந்து வந்த குண்டு சத்தம் ஓய்ந்து அமைதி திரும்பி இருக்கிறது.

இது தொடர்பாக இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று கூறும்போது, “சிரியா முழுவதும் பல்வேறு மாகாணங்களிலும் அமைதி நிலவுகிறது. எங்கும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் மீறப்படவில்லை” என தெரிவித்தது.

வியாழக்கிழமை கடுமையான வான்தாக்குதல்கள் நடைபெற்று வந்த நிலையில், போர் நிறுத்தம் அமலுக்கு வந்த ஒரு மணி நேரத்தில் அவை நிறுத்தப்பட்டு விட்டதாக ஊடகத்தகவல்கள் கூறுகின்றன.

இந்த சண்டை நிறுத்தம் சிரியா விவகாரத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.