சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று பரம எதிரிகள் என்றே அனேகமானவர்களுக்கு தெரியும்.
அந் நிறுவனங்களும் ஏட்டிக்கு போட்டியாக ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வருகின்றன.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன்களுக்கான OLED தொடுதிரைகளை சாம்சங் நிறுவனம் 2018ம் ஆண்டு முதல் வழங்க முன்வந்துள்ளதாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் 2017ம் ஆண்டிலிருந்தே குறித்த தொடுதிரைகளை வழங்கவுள்ளதாக தற்போது மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக அடுத்த வருடத்திலிருந்து அறிமுகமாகும் ஐபோன்கள் OLED மற்றும் LCD தொழில்நுட்பத்தினாலான தொடுதிரைகளைக் கொண்ட இரு பதிப்புக்களாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை சாம்சங் நிறுவனம் மாதந்தோறும் 20 மில்லியன் OLED திரைகளை ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளதாக தாய்வானை தளமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.