நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட பிரதமர் உத்தரவிட வேண்டும்: சீமான்

திருவையாறு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் இயற்கை வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக் கூட்டம் மண்டல ஒருங்கிணைப்பாளர் நல்லதுரை தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் செந்தில்நாதன், செந்தில்குமார், சுரேசு, அற்புதராசு, சண்முகம், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது கூறியதாவது:-

தஞ்சை மண்ணின் மீதும் விவசாயிகளின் மீதும் மாறாத பற்று கொண்டு வாழ்ந்தவர் நம்மாழ்வார். காவிரி டெல்டா மாவட்டங்களில் மீதேன் வாயு எடுப்பதை முழுமூச்சாக எதிர்த்து அதில் வெற்றி கண்டவர் நாட்டில் நீர்நிலைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களாலும், தைல மரங்களாலும் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. பண்டைய கால வேளாண் முறையில் நன்மைகள் அதிகம். புதிய ரசாயன உரங்கள் போடப்பட்ட விவசாய முறைகளில் தீமைகளே அதிகம்.

ஒரே உத்தரவில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து துணிச்சலான நடவடிக்கை எடுத்ததாக சொல்லுகிறார்கள். ஏன் நாடு முழுவதும் மதுக்கடைகள் இருக்க கூடாது என்று பிரதமர் உத்தரவிட வேண்டியது தானே.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து முரண்பட்ட கருத்துக்களை கூறிவருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கார்த்தி, அன்பரசன், சிவக்குமார், செந்தில் மற்றும் பலர் பேசினர்.