சர்வதேச கப்பலை போராடி மீட்ட இலங்கை கடற்படை!

இலங்கை கடற்படைத் தளபதியின் செயற்பாடு குறித்து, உலகின் முன்னணி கப்பல் நிறுவனம் ஒன்று பாராட்டு தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் போது இலங்கை கடற்யினர் செயற்பட்ட முறை தொடர்பில், தென் கொரியாவின் Hyundai Glovis நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக சர்வதேச வர்த்தக கப்பல்கள் இரண்டு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றில் ஒன்று Hyundai Glovis நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலாகும்.

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் வன்முறையான முறையில் செயற்பட்டதன் காரணமாக கப்பல் மற்றும் அதில் கொண்டு வரப்பட்ட வாகனங்களுக்கு சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்பட்டன. எனினும் கடற்படை தளபதி செயற்பட்ட முறையினால் பாதிப்புகள் தடுக்கப்பட்டதாகவும் அந்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணரத்ன தலைமையிலான கடற்படையினருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறித்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து கப்பல் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை தளபதி நடந்து கொண்ட விதம் உள்ளுர் ஊடகங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.