இன்று கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.48.55 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, வரதராஜன் தெரு, வெற்றி நகர் பிரிவு, குமரன் நகர் 3-வது தெரு வழியாக, தணிகாசலம் நகர் 80 அடி சாலை கால்வாய்த்துறை வரை மழை நீர் வடிகால் கட்டக் கூடிய பணியை தொடங்கி வைத்திருக்கிறேன். இந்த பணியை மூன்று மாத காலத்திற்குள் நிறைவு செய்து முடிக்க திட்டமிட்டு இருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்னிடத்தில் தெரிவித்தனர்.
பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு, பணிகளை விரைவு படுத்தி, இரண்டு மாத காலத்திற்குள் பணிகளை நிறைவு செய்ய வேண்டு மென பொதுமக்களின் சார்பில் அவர்களிடம் நான் கோரிக்கை வைத்துள்ளேன். அதனை ஏற்றுக்கொண்டு பணியை விரைவில் முடிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்ல, அண்மையில் வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட் டங்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டன என்பது எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். குறிப்பாக சென்னையில் ஆங்காங்கே மின் கம்பங்கள் சாய்ந்த காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
அதேபோல லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டு, பொதுமக்கள் தொல்லைக்கு ஆளானார்கள் என்பதும் தெரியும். முக்கியமான சாலைகளை பொறுத்தவரையில், சாய்ந்த மரங்களை ஓரளவு அப்புறப் படுத்தி இருந்தாலும், பல உள்சாலைகள், சிறிய சாலைகள், சந்து பொந்துகளில் விழுந்த மரங்களை அரசும், மாநகராட்சி நிர்வாகமும் இன்னமும் அப்புறப்படுத்தாமல் இருப்பதால், போக்குவரத்து பாதிப்புகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவற்றை எல்லாம் அப்புறப்படுத்தும் பணியினை வேகப்படுத்திட வேண்டும் என்று நான் அரசையும், மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்த கடமைபட்டுள்ளேன்.
அதோடு, அப்புறப்படுத்தப்பட்ட மரங்களை எல்லாம் கொண்டு சென்று, சென்னையின் மாநகராட்சி விளையாட்டுத் திடல்களில் போட்டு வைத்துள்ளனர். அதனால் பள்ளி மாணவர்களும், இளைஞர்களும் விளையாட்டுத் திடல்களை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள் என்பது ஒரு பெரிய குறையாக இருந்து கொண்டிருக்கிறது.
இதைவிட கொடுமை என்னவென்றால், மரங்களை ஆங்காங்கு குவித்து வைத்திருப்பதால் அங்கெல்லாம் கொசுக்களின் தொல்லை அதிகமாகி, ஆங்காங்கே பலவித தொற்று நோய்கள் பரவும் சூழல் உருவாகியுள்ளது. ஆகவே, அரசு இதில் அலட்சியம் காட்டாமல், மரங்களை அங்கிருந்து அப்புறப்படுத்த உடனடியாக மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, பணிகளை விரைவு படுத்த வேண்டும் என்று நான் வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
கே:- விவசாயிகள் மரணம் தொடர்கதையாகி வருகிறதே?
ப:- எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் இதுகுறித்து நான் தொடர்ந்து அரசை வற்புறுத்தி வருகிறேன். மறைந்த அம்மையார் ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது சட்டமன்றத்திலும் இதனை எடுத்துச் சொல்லி இருக்கிறோம். தமிழகத்தில் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுங்கள், தமிழக விவசாயிகளை அழைத்து, அவர்களுடைய பிரச்சினைகளை, கோரிக்கைகளை கேட்டறிந்து, புரிந்து உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தினை கூட்ட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வந்திருக்கிறோம்.
இப்போது பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நான் நேரடியாகவே சென்று சந்தித்து, விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தினை கூட்டி எடுக்கப்பட்ட தீர்மானங்களை அவரிடத்தில் தந்திருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, விவசாயிகளின் இன்றைய நிலையை கருத்தில் கொண்டு தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், அதற்காக சட்டமன்றத்தில் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, ஒரு தீர்மானமாக நிறைவேற்றிட வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன்.
ஆனால், இந்த அரசைப் பொறுத்தவரையில் இதையெல்லாம் கண்டும், காணாமல் இருப்பது போல செயல்படுவது உண்மையிலேயே வேதனைக்குரியது, வெட்கப்படத்தக்கதாக இருக்கிறது.
கே:- தமிழகத்தில் நடந்த ரெயிடுகள் குறித்து மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறதே?
ப:- தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு வந்த என்னை இத்தனை ஆர்வத்துடன் நீங்கள் வந்து சந்திப்பது என்பது உண்மையிலேயே எனக்குள்ள மகிழ்ச்சி தான். ஆனால் முதல்வராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, அவரிடத்தில் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடத்தில் கேட்கிறீர்கள் என்று தொடர்ந்து நான் சொல்லி வருகிறேன். ஆனால் அதற்கான முயற்சியில் நீங்கள் ஈடுபடாமல் இருப்பது வேதனைக்குரியது, வெட்கத்திற்குரியது.
கே:- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு குறித்து பலவித சந்தேகங்கள் நிலவி வருகிறதே?
ப:- உயர் நீதிமன்றமே இதுகுறித்து சந்தேகத்தை தெரிவித்து இருக்கிறது. அந்த விவரங்கள் எல்லாம் ஊடகங்களில் தெளிவாக வந்துள்ளன. ஆகவே, அதுகுறித்து நேற்றைக்கும் கூட நான் ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றேன். ஆக, இந்த சந்தேகங்களுக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்று சொன்னால், முதல்- அமைச்சராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் தான் இதற்கெல்லாம் ஒரு விளக்கத்தை, பதிலை சொல்ல வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.